சட்டசபையில் திமுக, காங். உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு; குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் தமிழக பாதிப்புகளை பட்டியலிட தயார்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சட்டசபையில் திமுக, காங். உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு; குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் தமிழக பாதிப்புகளை பட்டியலிட தயார்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள், பாதிப்புகள் இருப்பதை பட்டியலிட்டு கூற தயாராக இருக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். பின்னர் அமைச்சரின் பதிலில் திருப்தியில்ைல என்று கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின், ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியதாவது: இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று நான் ஒரு கடிதம் சபாநாயகரிடம் அளித்திருந்தேன்.

கடந்த கூட்டத் தொடரிலேயே அது ஆய்வில் இருப்பதாக கூறினீர்கள். இந்தக் கூட்டத் தொடரிலும், அந்த தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.

மேலும், தமிழக அரசு, இங்கு, என்பிஆர்(தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு) தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஆனால், முதல்வரிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

இது சம்பந்தமாக நேற்று சென்னையில் இஸ்லாமியர்கள் மிகப் பெரிய பேரணி நடத்தினார்கள். இதுபோன்று எதிர்ப்பு பேரணிகள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவி நடந்து வருகிறது.

ஆனால் சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, ‘‘தமிழக மக்கள் யாருக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார். தற்போது, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் நடைபெற வேண்டாம் என்று வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அதில், தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள், பாதிப்புகள் இருப்பதை பட்டியலிட்டு கூற தயாராக இருக்கிறேன். அதனால், தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்தக் கூடாது.

அமைச்சர் உதயகுமார்:தமிழகத்தில் கடைசியாக 2010ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 14 விவரங்கள் கேட்கப்பட்டது.



தற்போது, 2020ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில், கடந்த 2010ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளுடன் கூடுதலாக அதாவது மொழி, தேசியம், பெற்றோர்களின் விவரங்கள், அவர்கள் எங்கு பிறந்தார்கள் போன்ற கூடுதல் கேள்விகள் இடம்பெற்றுள்ளது.

இது சம்பந்தமாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மக்கள் எந்த ஆவணங்களையும் சமர்பிக்கத் தேவையில்லை.

வாய்மொழியாக பதில் அளித்தால் போதும். சில கேள்விகளுக்கு, தனியாக ஒரு காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் சந்தேகமாக இருந்தால் அதை பூர்த்தி செய்து விடலாம். தமிழக அரசு சார்பில் எப்போது கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கேள்வி குறிப்பிடப்படவில்லை.

சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை. இஸ்லாமிய சமூகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கடந்த 30 ஆண்டுகளாக, சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு, ஆதரவாக இருந்துள்ளது.

இதுபோன்று வதந்திகளை பரப்புகிறார்கள்.

வாக்கு வங்கிக்காக இதுபோன்று தகவல்களை கிளப்புகிறார்களா என்ற அச்சம் உள்ளது. அப்போது அமைச்சரின் பேச்சுக்கு திமுகவினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மு. க. ஸ்டாலின்: குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய அரசியல் சட்டத்துக்கே எதிரானது. அந்த ஒரு காரணமே, அதை திரும்ப பெறுவதற்கு போதுமானது.

தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பெற்றோர்கள், அவர்கள் பிறந்த ஊர், தேதி, அவர்களின் பண்டிகை, பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்களின் பண்டிகைகள் கேட்கப்படவில்லை.

இதில் பாகுபாடு உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பால், இஸ்லாமியவர்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்று கருத வேண்டாம்.

தமிழர்கள் அனைவருக்கும் பாதிப்பாகும். அதனால், தமிழகத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று தமிழக  அரசு உறுதியளிக்குமா?

அப்போது அமைச்சர் உதயகுமார் பதில் அளிக்க எழுந்தார்.

அப்போது திமுக உறுப்பினர் அன்பழகன் எழுந்து, இதற்கு முதல்வர்தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆனாலும் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, ‘தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனி நபர் பெயர், பிறந்த தேதி, தாய்மொழி, கல்வித் தகுதி, நிரந்தர முகவரி, தந்தை, தாய் விவரம் உள்ளிட்ட 16 விவரங்கள் கேட்கப்படுகிறது.

புதிதாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் மத்திய அரசிடம் விளக்கம்கேட்டுள்ளோம். டெல்லியில் கூட போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போது அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதனால் இந்த சட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

துரைமுருகன்: அசாம் மாநிலத்தில் தற்போது 19 லட்சம் பேரை சந்தேகம் என்று தனிமைப்படுத்தியுள்ளார்கள். ஜனாதிபதி குடும்பம், கார்கில் போரில் ஈடுபட்ட குடும்பம் கூட தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.



தற்போது இங்குள்ள இஸ்லாமியர்களுக்கும் இந்த நிலை ஏற்படுமோ என்று தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை இந்த அரசு, வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறது என்று கொச்சைப் படுத்துகிறது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்: நாங்கள் பக்ரீத், ரம்ஜான், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர், அமைச்சர் உதயகுமாரின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி திமுக வும், பேச அனுமதி மறுத்ததால், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜக உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

.

மூலக்கதை