பயிர் காப்பீடு மானிய திட்டத்தில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பயிர் காப்பீடு மானிய திட்டத்தில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைப்பு

* விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு
* தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக முடிவு

புதுடெல்லி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மானிய திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்களுக்கு இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்று கூறப்படுவதால், அவர்களுக்கு காப்பீடு உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை அமலாக்குவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், பிரதமரின் பசல் பீமா யோஜனா, மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியன திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பீடு நிறுவனங்களின் செயல்பாட்டு ஒதுக்கீடு 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.



மத்திய அரசின் மானியம் பாசன வசதி இல்லாத பகுதிகள் அல்லது பயிர்களுக்குப் பிரீமியம் விகிதம் 30 சதவீதமாகவும், பாசன வசதி உள்ள பகுதிகள் அல்லது பயிர்களுக்கு 25 சதவீதமாகவும் இருக்கும். 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாசன வசதி பெற்ற மாவட்டங்கள், முழுமையான பாசன வசதி பெற்ற பகுதி அல்லது மாவட்டமாகக் கருதப்படும்.

வரையறுக்கப்பட்ட கால வரம்புக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்குப் பிரீமியம் மானியத்தை விடுவிக்க மாநில அரசுகளால் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த பருவங்களுக்கு இந்தத் திட்டத்தை அமலாக்க அனுமதிக்கப்படமாட்டாது. கரீப் (ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம்) பருவத்திற்கான கடைசித் தேதி மார்ச் 31 ஆகவும், ரபி (அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை) பருவத்திற்கான கடைசித் தேதி செப்டம்பர் 30 ஆகவும் இருக்கும்.

வடகிழக்கு மாநிலங்களுக்குத் தற்போதுள்ள 50:50 என்ற மத்திய அரசின் பிரீமிய மானிய விகிதப் பங்கு 90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020 கரீப் பருவத்திலிருந்து செயல்பாட்டுக்கு வரும். மேலும், காப்பீடுக் கோரிக்கைகள் விரைவாக பைசல் செய்யப்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை இவ்வாறு முடிவு செய்துள்ளதால், பயிர் காப்பீடு திட்டத்தால் பயனடைந்த அல்லது எதிர்வரும் காலங்களில் பயனடையக்கூடிய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், மத்திய அரசு சார்பில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த மேற்கண்ட பயிர் காப்பீடு திட்டங்களின் பங்கை பாதியாக குறைத்துள்ளது.


அதன்படி, ஏற்கனவே 50 சதவீத (நீர்பாசன பகுதி) பிரீமிய மானியத்தின் பங்கை 25 சதவீதமாக பாதியாகவும், நீர்ப்பாசனம் செய்யப்படாத பகுதிகளுக்கு 30 சதவீதமாகவும் குறைத்துள்ளது. 2016ம் ஆண்டில் பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டபோது, ​​பயிர் கடன்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தனியார் காப்பீடு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளதாக உழவர் குழுக்கள், எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

ஆனால், பெரும் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை செலுத்துவதில் அதிக ‘க்ளைம்’ தொகை கேட்பதால் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து 2019-20ல் ஐசிஐசிஐ லோம்பார்ட் மற்றும் டாடா ஏஐஜி உள்ளிட்டவை இத்திட்டத்தில் இருந்து விலகி உள்ளன. ஏற்கனவே பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் இத்திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன.

விவசாயிகளை பொறுத்தமட்டில் அவர்கள் செலுத்தும் பிரீமியத்தில் கரீப் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 2 சதவீதமும், ரபி பயிர்களுக்கு 1. 5 சதவீதமும் மற்றும் பணப்பயிர்களுக்கு 5 சதவீதமும் செலுத்துகின்றனர். அரசின் சார்பில் செலுத்தப்படும் மானிய பிரீமிய நிலுவை தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பிரித்துக் கொண்டன.

இருப்பினும், மத்திய அரசின் மறுசீரமைப்பு அறிவிப்பால், மத்திய அரசின் மீதான நிதி சுமை குறையும், மாநிலங்களின் மீதான நிதிச் சுமை அதிகரிக்கும்.

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இனி இன்சூரன்ஸ் செய்வது கட்டாயமில்லை என்று கூறப்படுவதால், அவர்கள் பயிர் காப்பீடுக்கான உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் காப்பீடு திட்டங்களில் சேரும் 58 சதவீத விவசாயிகள் கடனாளிகள்; அவர்கள் இனி கட்டாயமாக காப்பீடுத் திட்டத்தில் சேரவேண்டியது இல்லை. முதல் ஆண்டில் (பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளின்) எண்ணிக்கை குறையக்கூடும்.

ஆனால் அதற்குப் பிறகு அது மீண்டும் அதிகரிக்கும்.

மாநிலங்களுடனான ஆலோசனை மற்றும் அனைத்து காப்பீடு நிறுவன பங்குதாரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த திட்டத்தில் மத்திய அரசு மறுசீரமைப்பு மாற்றம் செய்துள்ளது’’ என்றார்.

.

மூலக்கதை