பிப். 24ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர்: டிரம்பின் 36 மணி நேர சுற்றுப்பயண விவரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிப். 24ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர்: டிரம்பின் 36 மணி நேர சுற்றுப்பயண விவரம்

புதுடெல்லி: வரும் பிப். 24ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல் நிகழ்ச்சியாக அலகாபாத் தொடங்கி, டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்து வரை சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.

அவர், 36 மணி நேர பயணத்திட்டத்தால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார்.

25ம் தேதி வரை ஏறக்குறைய 36 மணி நேரம் இந்தியாவில் இருக்கும் டிரம்ப், முதல் நிகழ்ச்சியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்கிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், மாலையில் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கிறார்.

அதன்பின் டெல்லியில் உயர்மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தொழில்துறை கூட்டங்களில் பங்கேற்று இந்திய உணவுகளை சுவைக்கிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.

முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்திற்கு சென்று அதிபர் டிரம்பை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

அதன்பின் இரு தலைவர்களுக்காக கூட்டாக நடத்தப்படும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

டிரம்பின் 36 மணி நேர இந்திய சுற்றுப்பயணத்தால் நாடு முழுவதும் பல இடங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கூறுகையில், “ இந்தியாவில் ஒரு அமெரிக்க அதிபர் மேற்கொண்ட முதல் முழுமையான பயணத்தின் சிறப்பம்சமாக மோட்டேரா மைதான நிகழ்ச்சி இருக்கும்.

புதிய மைதானத்தின் உள்ளே அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றுவர். டெல்லி ஐதராபாத் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி பங்கேற்பர்’’ என்றார்.



மேலும், இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு ஜெர்மனிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

திங்கட்கிழமை நண்பகலுக்கு முன்னர் டிரம்ப் மற்றும் ஒரு உயர்மட்ட அமெரிக்க தூதுக்குழு அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகிறது. ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வு நடக்கும் இடமான மோட்டேரா ஸ்டேடியத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையிலான 22 கி. மீ பாதையில் டிரம்ப் மற்றும் மோடிக்கு கலாசார வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.

நிகழ்ச்சி மதியம் 12. 30 மணிக்கு தொடங்கும். அதன்பின் பிற்பகல் 3. 30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவுக்கு அதிபர் டிரம்ப் குழு புறப்படும்.

தாஜ்மஹாலில் ஒரு மணி நேரம் இருக்கும் டிரம்ப், அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்வார். இரவு 8 மணியளவில் டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள மவுரியா ஓட்டலில் டிரம்ப் தங்குவார்.



பிப். 25ம் தேதி காலையில், டிரம்பிற்கும் அவரது மனைவிக்கும் ராஷ்டிரபதி பவனில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். நண்பகலில் ஐதராபாத் மாளிகையில் டிரம்பும் மோடியும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவர்.

பிரதமர் அளிக்கும் மதிய உணவுக்குப் பிறகு, இரு தலைவர்களும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பர். பிற்பகல் 3 மணிக்கு, அமெரிக்க தூதரகத்தில் தனியார் நிகழ்வுகளில் டிரம்ப் பங்கேற்பார்.

இதில் தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் தூதரக ஊழியர்களுடன் சந்திப்பு நடக்கிறது. இரவு 7. 25 மணிக்கு, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் அவரது மனைவிக்கும் விருந்து அளிக்கப்படுகிறது.

அதன்பின் டிரம்ப் தனது 36 மணி நேர இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்கிறார்.


.

மூலக்கதை