பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாக்க பாலின தேர்வு, கருமுட்டை, அணுக்கள் விற்பனையை தடுக்க புது சட்டம்: தேசிய வாரியம் அமைத்து கண்காணிக்க ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாக்க பாலின தேர்வு, கருமுட்டை, அணுக்கள் விற்பனையை தடுக்க புது சட்டம்: தேசிய வாரியம் அமைத்து கண்காணிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், பாலின தேர்வு, மனித கருமுட்டைகள், அணுக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கவும், தேசிய வாரியம் அமைத்து இதனை கண்காணிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஏற்கனவே வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா-2020 நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், மருத்துவ ரீதியிலான கர்ப்ப கால திருத்த மசோதா-2020 நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா - 2020-க்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது.



இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், சட்ட அமலாக்கத்திற்கான அறிவிக்கையை  மத்திய அரசு வெளியிடும். இதனையடுத்து, தேசிய வாரியம் அமைக்கப்பட்டு சிகிச்சை மையங்கள் கண்காணிக்கப்படும்.

அப்போது மையங்களின் உள்கட்டமைப்புக்கான குறைந்தபட்ச தரம், பரிசோதனைக்கூடம், மருத்துவ உபகரணங்கள், பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேசிய வாரியம் வகுக்கும். மத்திய அரசின் அறிவிக்கை வெளியான 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாநில வாரியங்கள் மற்றும்  அதிகாரிகளை  நியமிக்கும்.

தேசிய வாரியம்  அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மாநிலங்களில் செயல்படும் சிகிச்சையகங்கள் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு மாநில வாரியங்களுக்கு உள்ளது.

மத்திய தரவுகளை பராமரிக்க தேசிய பதிவேடு மற்றும் பதிவு ஆணையத்திற்கு இந்த மசோதா வகை செய்யும்.

பாலின தேர்வு, மனித கருமுட்டைகள், அணுக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத நடைமுறைகளுக்கான முகமைகள், நிறுவனங்களை ஊக்குவிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கவும், தற்போதைய இந்த மசோதா வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சேவைகளை ஒழுங்குபடுத்தவும், மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் ஏற்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


.

மூலக்கதை