தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா சுவரில் முட்டிக் கொண்டதால் தலையில் காயம்: தற்கொலை முயற்சியை தடுக்க தொடர் கண்காணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா சுவரில் முட்டிக் கொண்டதால் தலையில் காயம்: தற்கொலை முயற்சியை தடுக்க தொடர் கண்காணிப்பு

புதுடெல்லி: தூக்கு தண்டனை குற்றவாளி வினய் சர்மா, சிறையின் சுவற்றில் முட்டிக் கொண்டு தலையில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லி நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக நான்கு  குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லியின் பாட்டியாலா விசாரணை நீதிமன்றம்  திங்கட்கிழமை புதிய தேதியை வெளியிட்டது. அதன்படி, நான்கு  குற்றவாளிகளுக்கும் டெல்லி திகார் சிறையில் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு  தூக்கு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் 4  குற்றவாளிகளுக்கும் நீதிமன்றத்தால் மரண தண்டனையை நிறைவேற்ற ஜன. 22 மற்றும்  பிப்.

1ம் தேதிகள் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, மூன்றாவது முறையாக 4  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தேதி அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வழக்கின் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, கடந்த 16ம் தேதி சிறையில் அவரது அறையில் தன்னைத் தானே சுவற்றில் தலையை முட்டிக் ெகாண்டதால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் தனது கையை காயப்படுத்த முயன்றதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், அவரை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, குற்றவாளி வினய், நல்ல மனநலத்தில் இல்லை என்றும், மரண தண்டனையை எதிர்ப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கப்பட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறை துறை அதிகாரிகள் தரப்பில், வினய் சரியான உடல்நலத்துடன் இருப்பதாகவும், புதிய மரண தண்டனை தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிகள் நான்கு பேரும் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, உணவு சாப்பிடவும் மறுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் அவர்களை சமாதானப்படுத்தி சிறைத்துறையினர் சாப்பிட வைத்து வருகின்றனர். அதேசமயம் குற்றவாளிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது குற்றவாளிகளின் பெற்றோர்களை மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல் எடை குறைந்தாலோ அவர்கள் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளிப் போகும்.

இதனை காரணமாக வைத்து வினய் சர்மா இப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருந்தும், மேற்கண்ட 4 பேரையும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


.

மூலக்கதை