திருப்பூர் அருகே அதிகாலை கோர விபத்து: பஸ் - லாரி மோதல்: 20 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பூர் அருகே அதிகாலை கோர விபத்து: பஸ்  லாரி மோதல்: 20 பேர் பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே இன்று காலை கேரள பயணிகள் பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 6 பெண்கள் உள்பட 20 பேர் பலியாகினர். 29 பேர் படுகாயமடைந்தனர்.

பெங்களூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9. 30 மணியளவில் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று எர்ணாகுளத்திற்கு கிளம்பியது. பஸ்சில் டிரைவர், மாற்று டிரைவர், கிளீனர் மற்றும் பயணிகள் 45 பேர் என மொத்தம் 48 பேர் இருந்தனர்.

பயணிகள் அனைவரும் எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காட்டிற்கு செல்பவர்கள். பஸ் இன்று காலை 7 மணிக்கு எர்ணாகுளம் அடைவதாக இருந்தது.

இந்நிலையில், அதிகாலை 3. 30 மணியளவில் பஸ், திருப்பூர் அருகே அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் ராக்கிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.



அப்போது எதிரேயுள்ள வழி பாதையில் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி செல்வதற்காக டைல்ஸ் ஏற்றிய கன்டெய்னருடன் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அது நிலை தடுமாறி தடுப்பு சுவரை தாண்டி சாய்ந்தவாறு வந்தது.

அப்போது லாரியில் இருந்த கன்டெய்னர் சாய்ந்தவாறு கூர்மையாக வந்து, அது எதிரே வந்த பஸ்சின் பக்கவாட்டை கிழித்து கொண்டு மோதி நின்றது. இதில் பஸ் பலத்த சேதமடைந்தது.

பஸ்சில் இருந்த டிரைவர் உட்பட பயணிகள் 48 பேரில் 6 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் என மொத்தம் 20 பேர் பலியாகினர். மற்ற 28 பேரில் பலர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் அவ்வழியே வந்த வாகனங்கள் ஸ்தம்பித்தன. விபத்து குறித்து தகவலறிந்த திருப்பூர், அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரும், போலீசாரும் அங்கு வந்து, பஸ்சில் சிக்கி கிடந்த சடலங்களையும், காயம்பட்டவர்களையும் மீட்டனர்.



சடலங்களையும், காயம்பட்டவர்களையும் திருப்பூர், அவிநாசி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது.

விபத்து நடந்த இடத்தை திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார். பலியானவர்கள் விபரம்: இறந்த 20 பேரில் 9 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் விபரம் வருமாறு : எர்ணாகுளத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, ஜெஸ்மோன் சாஜூ, திருச்சூரை சேர்ந்த நசீப் முகமது, ரோஸ்லி, கிரண்குமார், ஹனீஸ், இக்னி ரபேல் பாலக்காட்டை சேர்ந்த ராஜேஸ், சிவக்குமார் ஆகியோராவார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இவ்விபத்தில் கன்டெய்னர் லாரியின் முன்பகுதியும் நொறுங்கியிருந்தது. விபத்திற்குள்ளான இடத்தில் இருந்து சேதமடைந்த பஸ் மற்றும் கன்டெய்னர் லாரி அகற்றப்பட்டது.

இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.

அவர் கண்ணயர்ந்திருக்கலாம், என கருதப்படுகிறது.

விபத்தில் தப்பிய தம்பதி
விபத்தில் உயிர் தப்பிய ஆயுர்வேத மருத்துவர் ஜோர்டன் (37) கூறியதாவது: நான் எனது மனைவி அனு ஆகிய இருவரும் சவுதி பீரோ மெட்ரிக் தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் சென்று விட்டுவிட்டு, பாலக்காடு செல்வதற்காக நேற்று இரவு பஸ்சில் ஏறினோம்.

பஸ் டிரைவர் எதிர்புறம் உள்ள 19, 20 ஆகிய எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்தோம். பஸ்சில் தூங்கிவிட்டோம்.

விபத்து நடந்தது தெரியவில்லை. மயங்கிவிட்டோம்.

எங்களை மீட்டு திருப்பூர் அரசு தலைமையில் சேர்த்துள்ளனர். கண்விழித்து பார்த்தபோது மருத்துவமனையில் உள்ளது தெரியவந்தது.

எனக்கு மட்டும் தற்போது நெஞ்சுவலியும், லேசான சிராய்ப்பும் உள்ளது. மனைவி அனுவிற்கு ஒன்றும் காயமில்லை.

மேல் சிகிச்சைக்காக நான் எனது சொந்த ஊருக்கு செல்ல உள்ளேன். ’ என்றார்.

செல்லப்பிராணிகளும் பலி
விபத்தில் சிக்கிய பஸ்களில் இருந்து 2 நாய்க்குட்டிகளும், ஒரு பூனையின் சடலமும் மீட்கப்பட்டது. இவற்றை பயணிகள் தங்களுடன் எடுத்து வந்திருக்கலாம் என தெரிகிறது.

உறவினர்கள் தொடர்பு கொள்ள விபத்தில் பலியானவர்கள் பற்றி கேரளாவிலுள்ள உறவினர்கள் விபரம் அறியவும், சடலங்கள் குறித்து விபரம் தெரிவிக்கவும் கேரள போலீசார் தொடர்பு எண்களை அறிவித்துள்ளனர்.

ஏஎஸ்ஐ சந்தோஷ் 94464 93885, ஏஎஸ்ஐ பாபு 94976 55223 மற்றும் 0491 253 6688 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

.

மூலக்கதை