லஞ்ச புகாரில் சிக்கிய பாக். வீரருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட தற்காலிக தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி

தினகரன்  தினகரன்
லஞ்ச புகாரில் சிக்கிய பாக். வீரருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட தற்காலிக தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் 2009ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில், லஞ்ச புகார் அவர் மீது நிலுவையில் இருப்பதால், அந்த விசாரணை முடியும் வரை உமர் அக்மல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது குறித்து விரிவாக எதையும் விவரிக்க முடியாது. ஊழல் சட்ட விதி 4.7.1யின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐஎஸ்எல் பாணியில் பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. பிரபல பேட்ஸ்மேனான உமர் அக்மல், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அனைத்து வித போட்டிகளிலும் அவருக்கு தடை விதித்துள்ளதால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 29 வயதான உமர் அக்மல் இறுதியாக பாகிஸ்தான் அணிக்காக 2019ம் ஆண்டு அக்டோபரில் நடந்த டி20 தொடரில் விளையாடினார். அதற்குப் பின் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத உமர் அக்மலுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று வித சர்வதேச போட்டிகளையும் சேர்த்து அக்மல் 5,887 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக லாகூரில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில், அணி ஊழியர் ஒருவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சமீபத்தில் சர்ச்சையில் அக்மல் சிக்கினார்.

மூலக்கதை