அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை எதிரொலி : ஆக்ரா முதல் டெல்லி வரை சாலைகள், மேம்பாலங்களை அழகுற செய்யும் பணிகள் தீவிரம்

டெல்லி : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு டெல்லி, ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களை அழகுப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வர உள்ள ட்ரம்ப், இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அகமதாபாத் விமான நிலையத்திற்கு அன்று மதியம் வந்து இறங்கியதும் அவரை பிரதமர் மோடி வரவேற்க உள்ளார். மோடியுடன் 22 கிமீ ட்ரம்ப் சாலை மார்க்கமாக பயணித்து மோட்டாரா அரங்கத்தை சென்று அடைவார். இதையொட்டி அவர் பயணிக்கும் சாலையை விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல் மற்றும் வர்ணங்கள் பூசுதல் மற்றும் ஓவியங்களை தீட்டுதல் என அழகுற செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. முதலில் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் ட்ரம்ப், அதன் பிறகு உலகின் மிகப் பெரிய விளையாட்டு அரங்கான மோட்டாரோ மைதானத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மோடியுடன் டெல்லி சென்று இரு நாடுகளுக்கு இடையே வணிகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதன் பிறகு ட்ரம்ப் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். அதையொட்டி அங்கு பாயும் யமுனா ஆற்றில் தண்ணீரை பாய்ச்சி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. நாட்களுக்கு தொடர்ந்து  தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் ஆறு சுத்தம் அடைவதோடு அந்த பகுதியில் காற்று மாசுபாடு குறையும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஆக்சிஜனின் தரம் உயரும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை. ட்ரம்ப் வருவதையொட்டி ஆக்ரா மற்றும் டெல்லியிலும் அவர் பயணிக்கும் சாலைகள், மேம்பாலங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு அழகுறச் செய்யப்பட்டு வருகின்றன.  

மூலக்கதை