ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்

தினகரன்  தினகரன்
ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் முதல் கூட்டம் நிறைவு: தலைவராக நிரித்ய கோபால் தாஸ், செயலாளராக சம்பத் ராய் நியமனம்

டெல்லி: நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77  ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதித்த உச்ச நீதிமன்றம், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த அறக்கட்டளை வசம்  2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டப்பட்டிருந்தது.அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி திரத் ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி மக்களவையில் அறிவிப்பு  வெளியிட்டார். இந்த அறக்கட்டளையில் மொத்தம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மொத்தம் 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 7 முழு நேர உறுப்பினர்கள், 5 பேர் நியமன  உறுப்பினர்கள், 3 பேர் அறக்கட்டளைதாரர்களாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அயோத்தியைச் சேர்ந்த மகந்த் தினேந்திர தாஸ், விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, அனில் மிஸ்ரா, சங்கராச்சார்யா வாசுதேவனானந்த் மகராஜ், மகந்த் நிர்த்யா கோபால் தாஸ், சுரேஷ் தாஸ் ஆகியோர்  டெல்லிக்கு இன்று வந்தனர். மத்திய அரசு அமைத்துள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரின் இல்லத்தில் அறக்கட்டளையின் முதல் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அறக்கட்டளைச் செயலாளராக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் சம்பத் ராய் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். அறக்கட்டளையின் சேர்மனாக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை