கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி கரன்சி நோட்டுகளை அழிக்க சீனா முடிவு : இந்திய மருந்து நாளை செல்கிறது

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி கரன்சி நோட்டுகளை அழிக்க சீனா முடிவு : இந்திய மருந்து நாளை செல்கிறது

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நோய் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தணிந்தபாடில்லை. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். சீன அரசின் சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, பலியானோர் எண்ணிக்கை 1770ல் இருந்து 1900 ஆக அதிகரித்துள்ளது. 72,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மக்களின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். ஆனால், டாக்டர்களே கொரோனாவுக்கு பலியாவது மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது. அந்த வகையில், வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் நேற்று காலமானார். இவர், கொரோனா வைரசை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக போராடி வந்தார். இவர் இறந்த தகவலை கூட சீன அரசு மிக தாமதமாக அறிவித்தது. ஏற்கனவே,கொரோனா பற்றி முதல் முதலில் தகவல் தெரிவித்த டாக்டர் லி வென்லியாங், வைரஸ் பாதிப்பால் இறந்த போது கூட அதை சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைத்தது. இதனால் வென்லியாங் மரணத்தை போலவே, ஜிமிங் மரண செய்தி விஷயத்திலும் சீன அரசை அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். கொரோனாவுக்கு பலியாகும் 2வது மூத்த டாக்டர் ஜிமிங் ஆவார். அவரது மறைவுக்கு சீன அரசும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, வைரஸ் தொற்றால் 6 மருத்துவ பணியாளர்கள் இறந்துள்ளனர். 1,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வுகானில் டாக்டர்களுக்கு தேவையான மாஸ்க், உடல் முழுவதும் போர்த்திய ஆடைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அவரது ஷிப்ட் முடிந்ததும் அடுத்தவர் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதோடு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையும் அங்கு ஏற்பட்டுள்ளது.வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. வைரஸ் அறிகுறியுடன் வீட்டில் பதுங்கியிருப்பவர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்து வரப்படுகின்றனர். அதோடு, மெடிக்கல் ஷாப் மற்றும் ஆன்லைனில் காய்ச்சல் மருந்து வாங்குபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது. இப்படியான நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகமும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா ஏற்கனவே அறிவித்தபடி சி17 விமானத்தில் மருந்து பொருட்கள் நாளை அனுப்பப்பட உள்ளது.அமெரிக்க மருந்துகளின் இறக்குமதி வரி ரத்துஅமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை பல மடங்கு உயர்த்தி உள்ளன. இந்தநிலையில், கொரோனா வைரசால் சீனாவில் மருத்துவ பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக சீன அரசு அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, நோயாளிகளுக்கான உடைகள், ரத்த மாற்ற உபகரணங்கள், ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் ஆகியவை சுங்க வரி விலக்கு பெறும்.ஜப்பான் கப்பலில் மேலும் 88 பேருக்கு வைரஸ் அறிகுறிஜப்பானின் யோகோஹாமாவில் கடலில் தனியாக நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் தொற்று பரவி உள்ளதால், அதிலுள்ள சுமார் 3000 பேர் கடந்த 15 நாட்களாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை. தினந்தோறும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் நேற்று மேலும் 88 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் வைரஸ் அறிகுறி இருப்போரின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது.பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம்இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சன் விடோங், நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதேபோல் வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரசுக்கு எதிரான சண்டையில் சீனா நிச்சயம் வெற்றி பெறும். வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு 80,000 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. சீனாவிடம் வைரசுக்கு எதிராக போராடுவதற்கான அனைத்து வளங்களும் உள்ளது. ஹூபேய் மாகாணத்துக்கு வெளிப்புறம் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்றார்.

மூலக்கதை