கிரிக்கெட் கடவுளுக்கு மேலும் ஒரு மகுடம்: சச்சினுக்கு ‘லாரஸ்’ விருது.. இந்திய அளவில் முதன்முறையாக பெற்று சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட் கடவுளுக்கு மேலும் ஒரு மகுடம்: சச்சினுக்கு ‘லாரஸ்’ விருது.. இந்திய அளவில் முதன்முறையாக பெற்று சாதனை

பெர்லின்:மொனாகோவைச் சேர்ந்த லாரஸ் அறக்கட்டளை 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் லாரஸ் விருதுகளை வழங்குகிறது. 2020ம் ஆண்டுக்கான லாரஸ் விருதுகள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளிக்கும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார்.

அந்தவகையில் 1989 முதல் 2013ம் ஆண்டு வரை தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களைத் தந்த இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயர் லாரஸ் விருதில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பெர்லினில் நடைபெற்ற லாரஸ் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவில், 20 ஆண்டுகளில் விளையாட்டின் சிறந்த தருணத்திற்கான விருதினை ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

அப்போது, சச்சின் டெண்டுல்கர் கூறுைகயில், ‘‘1983ல் எனக்கு 10 வயதாக இருந்தபோது எனது பயணம் தொடங்கியது. அப்போது தான் இந்தியா உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றது.

ஆனால், அப்போது எனக்கு அதன் முக்கியத்துவம் புரியவில்லை, மேலும் எல்லோரும் கொண்டாடுவதால், நானும் அவர்களுடன் இணைந்து கொண்டாடினேன். அந்த சிறப்பை நானும் ஒருநாள் அனுபவிக்க விரும்பினேன்.

அதற்கான என் பயணத்தை தொடர்ந்தேன். இறுதில் அந்த சிறப்பை நானும் பெற்றுவிட்டேன்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘நான் உலகக்கோப்பையை என் கைகளால் ஏந்தியதை இன்றும் என்னால் மறக்க இயலாது; ஏனெனில் 22 ஆண்டுகளாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென முயற்சிசெய்த தருணம் அது.

அந்த கோப்பையை நான் நாட்டு மக்களின் சார்பாக ஏந்தி என் நாட்டிற்கு பெருமையை சேர்த்தது மிகவும் முக்கியத்துவமானது’’ என்று தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர் லாரஸ் விருதினை வென்றதன் மூலம், இந்தியாவில் இவ்விருதை வெல்லும் முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதேபோல், இந்தாண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினை கால்பந்து வீரர் மெஸ்ஸி மற்றும் பார்முலா ஒன் ரேசர் லீவிஸ் ஹேமில்டன் ஆகியோர் தட்டிச் சென்றனர்.

.

மூலக்கதை