கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி சீன வீரர்களுக்கு விசா மறுப்பு: டெல்லியில் இன்று போட்டி தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி சீன வீரர்களுக்கு விசா மறுப்பு: டெல்லியில் இன்று போட்டி தொடக்கம்

புதுடெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. மேற்கண்ட போட்டிக்காக டெல்லிக்கு பயணிக்கவிருந்த 40 பேர் கொண்ட சீனக் குழுவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு செயலாளர் வினோத் தோமர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘‘சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பால், அந்நாட்டு வீரர்கள் இந்தியா வந்து விளையாடுவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை.

உலகெங்கிலும் விளையாட்டு துறை ஒரு பெரிய நல்வாழ்வு சிக்கலை சந்தித்துள்ளது. இந்தியாவை போல மற்ற நாடுகளும் சீன விளையாட்டு வீரர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.



சீன மல்யுத்த வீரர்களைப் பற்றி யு. டபிள்யூ. டபிள்யூ எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. பாகிஸ்தான் மல்யுத்த வீரர்களுக்கு விசா வழங்காமல் இருப்பது வேறு பிரச்னை’’ என்றார்.

தொடர்ந்து, மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறுைகயில், ‘‘எந்த நாட்டின் குடிமக்களுக்கும் விசா மறுக்க முடியாது. ஏனெனில் இது ஒலிம்பிக் சாசனத்தின் விதிமுறை.

விளையாட்டை அரசியலில் இருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறோம். ஆனால் நோய் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.

நாங்கள் யாருடனும் பாகுபாடு காட்ட முடியாது.

ஆனால் தீவிரமான சிக்கல்களையும் புறக்கணிக்க முடியாது’’ என்றார்.

.

மூலக்கதை