ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் நடமாடும் நியாய விலை கடைகள்: சட்டசபையில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் நடமாடும் நியாய விலை கடைகள்: சட்டசபையில் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் ேரஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் நடமாடும் நியாய விலை கடைகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் பேசும்போது, லால்குடி தொகுதி நெருஞ்சலங்குடி நியாய விலை கடையை பிரித்து பள்ளிவயலில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: அந்த பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடை அமைக்க சாத்தியகூறுகள் இல்லை. அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், மாதத்திற்கு 2 முறை நகரும் கடைகளாக வேன் மூலம் ரேஷன் பொருள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போன்று, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரும் பகுதி நேர கடைகள் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.



அதன்படி அந்தந்த பகுதி மக்கள் நலன்கருதி, நடமாடும் கடைகளாக நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


நரசிம்மன்(காங்கிரஸ்):மாவட்ட ஆட்சியரே பகுதி நேர கடைகளை திறக்க உத்தரவிடலாம் என்று ஆணை பிறப்பிக்க வேண்டும். சக்ரபாணி(திமுக): தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனாக ₹3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது மத்திய அரசு அந்த திட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ:இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்கடன் ₹11,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான கடன் வழங்குவது அதிமுக அரசு தான். உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா?
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று பாராட்டி பேசுவது வழக்கம். அது போல் இன்று அவ்வாறு பேசினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது, அவை முன்னவரை (ஓ. பன்னீர்செல்வம்) ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். அவர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு பிடித்து இருக்கிறாரா.

அந்த பெயருக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று காளை அடக்கி காட்டுவாரா என்பதை சபாநாயகர் மூலம் அறிய விரும்புகிறேன்’’ என்றார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு எதிர்கட்சித் துணைத்தலைவரை அழைத்து செல்கிறோம்.

அவர் அங்கு பார்வையாளராகவோ அல்லது மாடு பிடிக்கவோ வரலாம்’’ என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.


.

மூலக்கதை