திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை விரைவில் தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை விரைவில் தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக்கிற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு, கண்ணாடி பாட்டில்களில் சுத்திகரிப்பு குடிநீர் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

இதனால் இனி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. இதனால் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் தங்கும் அறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இருப்பினும் கடைகள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாற்று ஏற்பாடு செய்ய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான சுகாதார அலுவலர் ஆர். ஆர். ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
புனிதமான திருமலையை சுகாதாரமாக வைத்திருப்பதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக குடிநீரை மண் குடுவை, செம்பு மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு நிறுவனம் ₹40க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

நேற்று சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில் பிரச்னை ஏதும் இல்லை என்றால் விரைவில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்படி பக்தர்களுக்கு ₹40 விலையில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கண்ணாடி பாட்டிலில் வழங்கப்படும்.

பக்தர்கள் தண்ணீரை குடித்துவிட்டு காலி பாட்டிலை கொடுத்தால் ₹20 திரும்ப வழங்கப்படும் என தண்ணீர் பாட்டில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை