கோவை அருகே நள்ளிரவில் விபத்து: தேமுதிக நிர்வாகி உள்பட 2 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவை அருகே நள்ளிரவில் விபத்து: தேமுதிக நிர்வாகி உள்பட 2 பேர் பலி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த போடி பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (34). பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர்.

கோவை மாவட்ட போட்டோகிராபர் அசோசியேஷன் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் நேற்று நள்ளிரவில், செந்தில்குமார்(35) மற்றும் கல்லூரி மாணவர் கிஷோர் (19) ஆகியோருடன் கோவையில் உள்ள போட்டோகிராபர் அசோசியேஷனை சேர்ந்த சிலருக்கு காலண்டர் சப்ளை செய்வதற்காக காரில் புறப்பட்டார்.

காரை சந்திரசேகர் ஓட்டி சென்றார். கோவையில் உள்ள சங்க உறுப்பினர்களுக்கு காலண்டரை சப்ளை செய்தபின் அதே காரில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கிணத்துக்கடவு மேம்பாலத்தை கடந்து வரும்போது பாலத்தின் ரோட்டோரம் இணைப்பு சாலை பணிக்காக போடப்பட்டிருந்த கருங்கற்கள் மீது கார் ஏறியது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் கார் ரோட்டில் உருண்டு பலத்த சேதமடைந்தது.

காரில் இருந்த 3 பேரும் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். தகவலறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காரில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே சந்திரசேகர் மற்றும் கிஷோர் இருவரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த செந்தில்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை