பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பணி நிரந்தரம், ஊதிய உயர்வுகோரி வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.

இங்குள்ள 5 அலகுகளில் நிலக்கரியை எரியூட்டி 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரதம் உள்பட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.



இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய வாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றாத அனல் மின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும் என்று கோஷங்கள் முழங்கினர்.

கோரிக்கைகளை  உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மின் உற்பத்தி பாதிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

.

மூலக்கதை