குஜராத்தில் 68 கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை : நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
குஜராத்தில் 68 கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை : நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது

பூஜ்: குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அந்த கல்லூரியின் முதல்வர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பூஜ் நகரத்தில் இயங்கி வரும் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் கல்லூரியில் கடந்த வாரம் 68 மாணவிகளுக்கு அவர்களின் ஆடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டது. இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் உருவாக்கியது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு உள்ளிட்ட நெருக்கடி காரணமாக கல்லூரி முதல்வர்  ரீட்டா ரணிங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.அவருடன் சேர்த்து கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா மற்றும் கல்லூரிக்கு தொடர்பில்லாத அனிதா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர்,அலுவலக உதவியாளர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.சம்பவத்தின் பின்னணி குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமிநாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்த கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள ஹாஸ்டலில் தங்கி பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியை சில மாணவிகள் உடைத்துள்ளதாக தெரிகிறது. மாணவிகள் சிலர் இந்த கட்டுப்பாட்டை மீறிய தகவல் விடுதி காப்பாளருக்கு தெரியவந்ததை அடுத்து அவர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். வார்டன் அளித்த புகாரின்பேரில்,  கல்லூரி முதல்வர் தலைமையில்,  விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளை களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர்.இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற சோதனையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த விவகாரம்  வெளிச்சத்துக்கு வந்து  சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் குழு ஒன்று சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு சென்று  விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில், குஜராத் மாநில மகளிர் ஆணையம்  இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, பூஜ் போலீசாரிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக அதன் தலைவர் லீலா அங்கோலியா தெரிவித்தார்.

மூலக்கதை