குரூப் 2 தேர்வில் மெகா மோசடி அம்பலம்: ஒரே தெருவில் 12 பேர் சிக்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குரூப் 2 தேர்வில் மெகா மோசடி அம்பலம்: ஒரே தெருவில் 12 பேர் சிக்கினர்

* ஒரு குடும்பத்தில் 6 பேருக்கு வேலை
* அடுத்தடுத்த மோசடி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்2 தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தற்போது அம்பலமாகி உள்ளது. கடலூரில் ஒரு கிராமத்தில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் வேலைக்குச் சேர்ந்ததும், அதில், 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து அதிகாரிகளாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து முக்கிய குற்றவாளிகளான டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன், உதவி ஆய்வாளர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதி பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வந்த அரசு ஊழியர்கள் உட்பட ேநற்று வரை 46 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு முறைகேட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நபர்களின் விடைத்தாள்களை திருத்த அதற்கான விடைகளை குறித்து கொடுத்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆசிரியர் செல்வேந்திரன்(45) மற்றும் குரூப்4 தேர்வில் வெற்றி பெற இடைத்தரகர் ஜெயகுமாரிடம் ரூ. 12 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன்(25) ஆகியோர் கடந்த 14ம் தேதி ஜார்ஜ் டவுன் மற்றும் எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடியாக அழியும் மை கொண்ட பேனாவை தயாரித்து கொடுத்த புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதற்கிடையே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் மற்றும் சிபிசிஐடி போலீசார் கைது செய்த ஓம்காந்தன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. குரூப் 4, குரூப்2ஏ மற்றும் விஏஓ தேர்வை தொடர்ந்து மற்றொரு மெகா மோசடியா கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் ரூ.

10 முதல் ரூ. 15 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு இருவரும் பெரிய அளவில் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2, குரூப்4 தேர்வில் அழியும் மை கொண்ட பேனாவை தேர்வர்களிடம் கொடுத்து மோசடியாக தேர்வில் வெற்றி  பெற வைத்ததும் ஜெயகுமார் மற்றும்  ஓம் காந்தனிடம் நடத்திய விசாரணையில் உறுதியாகி உள்ளது.



அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2011ம் ஆண்டு குரூப் 2 தேர்வில் குறிப்பாக கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த 12 பேர் இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் தலா ரூ. 8 லட்சம் பணம் கொடுத்து மோசடியாக தேர்வு எழுதி தற்போது பல்வேறு அரசு பதவிகளில் அதிகாரிகளாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6  பேர் வேலை வாங்கியுள்ளனர்.

அப்போது நடந்த தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் பணியில் சேர்ந்த 117 பேரில் 60க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 2011ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் ஜெயகுமார் மூலம் தேர்வில் மோசடியாக வெற்றி பெற்று அரசு பணியில் உள்ள 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் ேநற்று முன்தினம் நாளை கடலூரில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளது.



இதனால் 12 பேரும் விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 12 அரசு அதிகாரிகளையும் சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், இந்த மோசடி தற்போது வெளியாகி உள்ளதால் மீண்டும் இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனை மீண்டும் 7 நாள் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக அப்போது கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை நேர்ந்த தவமணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் கிழக்கு ராமாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த 12 பேர் இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் தலா ரூ. 8 லட்சம் பணம் கொடுத்து மோசடியாக தேர்வு எழுதி தற்போது அரசு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.


.

மூலக்கதை