டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு ரூ16.33 கோடி அபராதம்

சென்னை: டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ16. 33 கோடி அபராதம் வசூல் செய்ததாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தெற்கு ரயில்வேயில் ஆர்பிஎப் பணியாற்றியது குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டில் ஓடும் ரயில் தவறி விழுந்து உயிர்க்கு போராடிய 10 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் ரயில்வேக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 95 ஆயிரத்து 674 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்றவர்கள் 336 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ4 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே தண்டவாளங்களை கடந்து ெசன்றதாக 11,247 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ36 லட்சத்து 67 ஆயிரத்து 350 வசூலிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 995 பேர் அனுமதியின்றி முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ததாகவும், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணம் செய்ததாக ரூ12 லட்சத்து 69 ஆயிரத்து 475 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

1,786 ஆண்கள், மகளிர் பெட்டியில் பயணம் செய்ததாக ரூ4 லட்சத்து 60 ஆயிரத்து 950 அபராதமும், படிக்கட்டில் பயணம் செய்ததாக 9 ஆயிரத்து 512 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ32 லட்சத்து 27 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ரயில்களில் புகைப்பிடித்ததாக 1,742 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக 1,810 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ9 லட்சத்து 40 ஆயிரத்து 450 வசூலிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 பேரை டிக்கெட் பரிசோதகர்கள் ரயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பிடித்து, ரூ16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 அபராதம் வசூல் செய்துள்ளனர். கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி வரப்பட்ட 136 குற்றவாளிகள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ6 கோடியே 53 லட்சத்து 22 ஆயிரத்து 598 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணமின்றி ரயில்களில் கொண்டு வரப்பட்ட ரூ4. 73 கோடி மதிப்புள்ள 14. 4 கிலோ தங்கம், ரூ53 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ4 கோடியே 99 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ரயில்வேக்கு இடையூறு செய்த 17 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ22 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சொத்துக்களை திருடியதாக 562 குற்றவாளிகளிடம் இருந்து ரூ22. 43 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்திய 57 ஆயிரத்து 878 பேரிடம் இருந்து ரூ1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை