தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

புதுச்சேரி: குற்றவியல் நடை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளில் வழக்கறிஞர் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19, 20ம் தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் புதுவையில் நேற்று நடந்தது.

தலைவர் வேல், பொருளாளர் பாலசுப்ரமணியன், புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துவேல், செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளை வழக்கறிஞர் தொழிலுக்கு பாதிக்காத வகையில் மாற்றம் கொண்டுவர உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழக வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் சேமநலநதி ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக தமிழக அரசு வழங்க வேண்டும். புதுச்சேரியிலும் தமிழகத்தை போல் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்ய உத்தரவிடும் அதிகாரத்தை கீழமை நீதிமன்றங்களிலே வழங்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதுபோல், தமிழ்நாட்டில் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

போலி வழக்கறிஞர்களை அந்தந்த வழக்கறிஞர் சங்கங்களில் கண்டறிந்து அதனை பார் கவுன்சிலுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

.

மூலக்கதை