கொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பரவிய டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 14 நாளாக அடைப்பட்டிருந்த அமெரிக்க பயணிகள் மீட்பு

யோகோஹாமா:  சீனாவில் கொரோனோ தாக்குதலுக்கு  புதிதாக 105 பேர் இறந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 1770ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 2048 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 70 ஆயித்து 548 பேருகு–்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10,844 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 7,264 பேருக்கு நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.  வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, ஜப்பானின் யோகோஹாமாவில் கடலில் தனியாக நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு பயணிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இதில், முதலில் 60 பேர் வரையில் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அது மெல்ல மெல்ல மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நேற்று மட்டும் 99 பேருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அக்கப்பலில் தற்போது 355 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில் கப்பலில் சிக்கி தவிக்கும் அமெரிக்க பயணிகளை மீட்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. நேற்று காலை கப்பலில் இருந்த அமெரிக்க பயணிகள் மட்டும் பாதுகாப்பு உடைகளுடன் வெளியேற்றப்பட்டனர். தலைமுதல் பாதம் வரை பாதுகாப்பு கவசம் அணிந்தவர்கள் கப்பலில் இருந்து வந்த அமெரிக்கா பயணிகளை பேருந்துகளில் ஏற்றி  சென்றனர். பின்னர் இவர்கள் விமானம் மூலமாக அமெரிக்க அழைத்து செல்லப்பட்டனர். ஜப்பானில் இருந்து இரண்டு விமானங்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல் மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த பயணிகளையும் மீட்பதற்கு அந்தந்த நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. \'நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க ஆலோசனை\'சீனாவில் கொரோனா வைரஸ்க்கு புதிததாக 105 பேர் பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 1770 ஆக உயர்ந்தது என சீனா நேற்று அறிவித்தது. 2048 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,548 ஆக உயர்ந்துள்ளது. இதனால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பது குறித்து சீன அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். வழக்கமாக சீனாவில் மார்ச் மாதம் சீன மக்களின் அரசியல் ஆலோசனை மாநாடு (சிபிபிசிசி) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும். அத்துடன் சீன மக்களின் நாடாளுமன்றம் (என்பிசி) கூடும். இதை அடுத்த மாதம் 5ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வர். கொரோனா வைரஸ் பரவும் நிலையில் இவ்வளவு பேர் இந்த கூட்டத்தில் கூட வேண்டாம் என சீன அரசு நினைக்கிறது. அதனால் நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். \'14 நாட்கள் தனியறையில் கண்காணிப்பு\'ஜப்பான் கப்பலில் இருந்து மீட்டு அழைத்து செல்லப்பட்ட பயணிகளில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். பிற பயணிகளுடன் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. \'ஜப்பான் மன்னர் பிறந்த நாள் விழா ரத்து\'கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக மன்னர் நருஹிட்டோவின் பிறந்த நாளன்று பொதுமக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகின்றது. வாழ்த்து புத்தகத்தில் மன்னர் கையெழுத்திட்டு தரும் நிகழ்வும் ரத்து செய்யப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை