பெத்தப்பள்ளி எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழப்பு; 20 நாட்களுக்கு பிறகு காரை கண்டுபிடித்த போலீசார்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

தினகரன்  தினகரன்
பெத்தப்பள்ளி எம்எல்ஏவின் சகோதரி குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழப்பு; 20 நாட்களுக்கு பிறகு காரை கண்டுபிடித்த போலீசார்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

ஹைதெராபாத்: தெலுங்கானா மாநிலம் காக்கித்தியா கால்வாயில் பெத்தப்பள்ளி எம்எல்ஏ மனோகர் ரெட்டியின் சகோதரி குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகி 3 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த சத்திய நாராயண ரெட்டி( 55) உர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதா 50 அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில்  இவர்களின் மகள் வினை ஸ்ரீ பல் மருத்துவராக நிஜமாபாத்தில் படித்து வருகிறார். பெத்தப்பள்ளி எம்எல்ஏ மனோகர் ரெட்டியின் சொந்த சகோதரி ராதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் மூவரும் கால்வாயில் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணேறுவரம் கிராமத்தை சேர்ந்த பிரதீப் மற்றும் அவரது மனைவி பைக்கில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்  இருவரும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பிரதீப்பின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பிரதீப்பின் மனைவியின் உடல் கிடைக்கவில்லை. காக்கித்தியா கால்வாயில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று வந்த நிலையில் சடலத்தை தேடுவதற்காக கால்வாயில் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அலகனூர் அருகே கால்வாயில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளாகி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரை கிரேன் மூலம் வெளியே எடுத்து பார்த்தபோது அதில் மூன்று சடலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மூலக்கதை