பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்!

தினமலர்  தினமலர்
பெரு நிறுவனங்களும் உணர வேண்டும்!

டெலிகாம் துறையின் சர்ச்சைகள், ஓயாத அலைகள் போல அடிக்கின்றன என்று சொன்னால், அது மிகையல்ல. ஆனால், அலைக்கற்றைகள் ஓய்ந்து விடும் சூழல், பல நிறுவனங்களில் தொடர்ந்து ஏற்படுகிறது.

ஒவ்வொரு நிறுவனமாக ஓய்ந்து, அடங்கி முடியும் கதைகள் தான் எத்தனை...கடந்த, 2008ல், நிதி ஆதாரம் அதிகம் இன்றி நிறுவப்பட்ட பல நிறுவனங்கள், அப்போதைய ஒதுக்கீட்டில், அலைக்கற்றை உரிமைகளைப் பெற்றன. ஆனால், பல நிறுவனங்கள் மூடுவிழா கண்டன. இந்த மூடுவிழாக்களால் தான் எத்தனை தொடர் விளைவுகள்!இந்த நிறுவனங்களின் முதலீட்டு இழப்பு ஒருபுறம்; மறுபுறம், அவற்றின் உரிமையாளர்கள் ஏற்கனவே சிறப்பாக நடத்தி வந்த தொழில்களும் முடங்கி விட்டன.வங்கிகள், இரு வகையான இழப்பை சந்திக்கின்றன. முதலில், தொலைதொடர்பு நிறுவனங்களின் வாராக் கடன்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அடுத்து, அந்த நிறுவன குழுமங்கள் செய்யும் மற்ற தொழில்களும் நசிந்து, வங்கிகளுக்கு வாராக் கடன்களாக மாறுகின்றன. பன்னாட்டு முதலீட்டாளர்களின் நிறுவனங்கள் சில, இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி, அதை வாராக்கடனாக்கி விட்டு, சட்டத்தின் பிடியில் இன்றுவரை சிக்காமல் இருக்கின்றன.

ஆரம்பத்தில், பொது பங்குதாரர்கள் சந்தித்த இழப்புகள் அதிகமாக இல்லாமல் இருந்தன. ஆனால், இந்த நிலை மாறி, இன்று இந்த இழப்பு, சாதாரணபங்குதாரர்களையும் பாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.இந்த நிலையை உருவாக்கிய காரணங்கள் மூன்று. முதலில், ஜியோவின் வரவு, போட்டிச் சூழலை மாற்றியது.இரண்டாவதாக, ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், கடன் அதிகரிப்பால், புதிய முதலீடுகளைச் செய்ய முடியவில்லை.

இறுதியாக, அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.இத்தகைய காரணங்களால், நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த அபாயம், ’வோடாபோன் -ஐடியா, கெயில், பவர்கிரிட், ஏர்டெல்‘ ஆகிய நிறுவனங்களை பெரிதும் அச்சுறுத்துகிறது.இதில், குறிப்பாக, வோடாபோன் ஐடியா மூடப்படும் அபாயத்தில் இருப்பது தெரிகிறது.

இந்நிறுவனம், அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தரக்கூடிய இடத்தில் இல்லை. வாடிக்கையாளர்கள், நிறுவனம் தொடர்ந்து செயல்படும்பட்சத்தில், அதே சேவையைப் பயன்படுத்துவர். நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராவிட்டால், புதிய சேவையை அணுக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும்.வோடாபோன் வாடிக்கையாளர்கள், ஜியோ, பி.எஸ்.என்.எல்., அல்லது ஏர்டெல் சேவைகளுக்கு மாற வேண்டிவரும்.வரும் மாதங்களில், தொலைதொடர்பு துறையின் போட்டிச் சூழல், அனேகமாக மேலும் குறையக்கூடும் என்றே தோன்றுகிறது. இந்த நகர்வு, ஏர்டெல், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல்., ஆகிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். இந்த சூழலை, எந்த நிறுவனம் சாதகமாக்கி கொள்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நிறுவனங்கள், 2006ல் இருந்தே இந்த நிலுவைத் தொகையை, செலுத்தி இருந்தால், சிக்கல்கள் இந்த பரிணாமத்தில் அமைந்து இருக்காது.

கட்ட வேண்டிய வரியும், அபராதமும் நிறுவனத்தையே மூழ்க செய்யும் அளவுக்கு சென்றதற்கு நிறுவனத்தின், நிர்வாக மேலாண்மையே முக்கிய காரணம் என்பதை இந்த நேரத்தில் வருங்கால பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.சட்டங்களை சரியாகப் புரிந்து, முழுதாக மதித்து, தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தை, பெரு நிறுவனங்களும் உணரும் சுழல் வந்துள்ளது.

மூலக்கதை