துவங்கின! ரூ.293 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் ... 24 மாதங்களில் முடிக்க மாநகராட்சி இலக்கு

தினமலர்  தினமலர்
துவங்கின! ரூ.293 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் ... 24 மாதங்களில் முடிக்க மாநகராட்சி இலக்கு

மதுரை : மதுரை மாநகராட்சியுடன் இணைந்த 28 வார்டுகளில் முதற்கட்டமாக 13 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்க 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.293.37 கோடியில் பணிகள் துவங்கியுள்ளன. இப்பணிகளை 24 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சுற்றியிருந்த உள்ளாட்சிகள் 2011ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. 72 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடைக்கும் என விரிவாக்கப்பகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில் அடிப்படை வசதியான பாதாள சாக்கடையின்றி அவதிக்குள்ளாயினர். பல குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது. இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் முதற்கட்டமாக வைகை வடக்குப் பகுதியில் இணைந்த 13 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்க ரூ.293.37 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள நவ., இறுதியில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நடைமுறைகள் அனைத்தும் முடிந்து வண்டியூரில் இதற்கான பூமி பூஜை நடந்தது. தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

வைகைக்கு தெற்கு பகுதியில் புதிதாக இணைந்த வார்டுகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: 13 வார்டுகளில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைப் பணி 24 மாதங்களில் நிறைவு பெறும். பின் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காது. இப்பணி நிறைவு பெற்ற பின் வைகையில் கழிவுநீர் கலக்காது, என்றனர்.

மூலக்கதை