நல்லா நடிக்கறாங்க! அமைச்சர் தொகுதியில் மணல் கடத்தல்:அறிந்தும் அதிகாரிகள் ஏன் அலட்சியம்?

தினமலர்  தினமலர்
நல்லா நடிக்கறாங்க! அமைச்சர் தொகுதியில் மணல் கடத்தல்:அறிந்தும் அதிகாரிகள் ஏன் அலட்சியம்?

பேரூர்:நொய்யலில் பெருகியுள்ள மணலை, கொள்ளையர்கள் வெட்டி கடத்துவதால், அதன் பாதை மாறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் சரியும் நிலை உருவாகியுள்ளது.
அமைச்சர் வேலுமணியின் தொகுதியிலேயே நடக்கும் இந்த கடத்தல் குறித்து, அதிகாரிகள் அறியாமல் உள்ளனரா, அல்லது உபரி வருமானம் வருவதால், அறியாதது போல் நடிக்கின்றனரா என்பதே, இப்பகுதி விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்வி.கோவை மேற்கு தொடர்ச்சிமலையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. நீரோடைகள் மற்றும் சிற்றாறுகள் திரட்டி வந்த மணல், நொய்யலில் குவிந்துள்ளது.இந்த மணல், ஆற்றின் நீரை 'ஸ்பாஞ்ச்' போல உறிஞ்சி வைத்து, சுற்றுப்பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை, நிலைநிறுத்தியுள்ளது.
தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, விவசாய பரப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளை தீவிரமடைந்துள்ளது. செம்மேடு பகுதி நொய்யல் ஆற்றில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு, பல இடங்களில் மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது; நீர்வழிப்பாதை மாற்றப்பட்டுள்ளது.'கழுதைகளால்' மாறுது பாதை!ஆலாந்துறையில், 15க்கும் மேற்பட்ட 'கழுதை'கள் கடத்தலில் ஈடுபடுகின்றன.
2018ல், தொம்பிலிபாளையம், கள்ளிப்பாளையம், ஆலாந்துறை பள்ளிவாசல் வீதி நொய்யல் ஆறு, மணல் கொள்ளையரால் சிதைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளம், பாதை மாறி விளைநிலங்களை சிதைத்தது.அமைச்சரின் தொகுதியிலேயே, மணல் கடத்தல் தீவிரமடைந்துள்ளது, அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? அல்லது ஊதியத்துடன் கூடுதல் 'வருவாய்' கிடைப்பதால், கண்டும் காணாமல் உள்ளனரா என்பதே கேள்வி.
பட்டதாரி விவசாயி ஒருவர் கூறியதாவது:மணல் கடத்தலை தடுப்போரை, அரசியல்வாதிகளின் ஆதரவுடன் மணல் மாபியாக்கள் மிரட்டுகின்றனர். தீவிர நடவடிக்கை எடுத்த, இரண்டு 'இளம்' போலீசாரை, இடம் மாற்றியுள்ளனர். அப்பாவி விவசாயிகள் என்ன செய்ய முடியும்.குண்டர் சட்டத்தில் நடவடிக்கை, சிறப்பு ரோந்து படை, கண்காணிப்பு கேமரா என்றெல்லாம் கூறினர். எதுவும் ஆக்கப்பூர்வமாக இல்லாததால், மணல் கொள்ளை கட்டுக்கடங்கவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில், மணல் கொள்ளையர்களை 'குண்டாஸ்'ல் கைது செய்ய, புதிய 'ஆப்' ஒன்றை உருவாக்கினர்.அதில் போலீஸ், வருவாய்த்துறை, கனிம வளத்துறையினரை, கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொண்டாமுத்துார் ஒன்றியத்திலும், அதே போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.திட்டமெல்லாம் சரி... அதை அமல்படுத்த, அமைச்சரும் அதிகாரிகளும் முன்வருவார்களா?

மூலக்கதை