மரணித்த மனிதம்! 40 ஆண்டு மரம் அடியோடு சாய்ப்பு: கருவம்பாளையம் மக்கள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
மரணித்த மனிதம்! 40 ஆண்டு மரம் அடியோடு சாய்ப்பு: கருவம்பாளையம் மக்கள் அதிர்ச்சி

திருப்பூர்:திருப்பூரில் அனுமதி பெறாமல், நாற்பது ஆண்டு கால மரம் வெட்டப்பட்டது, பொது மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக, போலீசில் 'பெயரளவு'க்கு புகார் கொடுக்கப்பட்டது.திருப்பூரில், பசுமையை உருவாக்கும் நோக்கில், மரக்கன்றுகளை வளர்க்க, தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு பக்கம், மரங்களை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன.இதனால், நகரப்பகுதியில் பசுமை காணாமல் போய் வருகிறது.குடியிருப்பு பகுதியில், மின் கம்பிகளில், உரசுவதாகக் கூறி, மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. தற்போது, புதிதாக வீடு கட்டுபவர்களும் மரங்களை இடையூறாக நினைத்து வெட்டி வருகின்றனர்.
மரங்களை வெட்ட வேண்டுமென்றால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறுவதில்லை.கருவம்பாளையம் விரிவு, இரண்டாவது வீதியில், ரேஷன் கடை செயல்படுகிறது. இதன் அருகே, குடியிருப்பு பகுதியையொட்டி, சாலையோரம் இருந்த இலுப்பை மரத்தை, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், ஆட்களை கொண்டு, நேற்று, அடியோடு வெட்டினார். மரக்கிளைகளை மட்டும் வெட்டாமல், மரத்தையே வெட்டியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரம் வெட்டப்பட்டது குறித்து, திருப்பூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் அன்பரசுவிடம் கேட்டபோது, 'திருப்பூர் டவுன் வி.ஏ.ஓ., குமார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, திருப்பூர் மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். மரம் வெட்டியவர் யார் என்று விசாரணை நடக்கிறது,' என்றார்.'நாற்பது ஆண்டுகளாக, இப்பகுதியில் மரம் இருந்தது. கிளைகளை மட்டும் வெட்டியிருந்தால், வளர்ந்த பின், நிழல் கிடைத்திருக்கும். முற்றிலும் வெட்டி அகற்றியதால், பயனில்லாமல் போய்விட்டது.
இலுப்பை மரம் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. நுாறு அடி வரை வளரக்கூடிய மரங்களில் இலுப்பையும் ஒன்று.இம்மரத்தின் பழத்தை வவ்வால்கள் விரும்பி உண்ணும். கொட்டையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். இதன் விதை மண்ணில் விழுந்தால் அருகிலேயே, செடியாக வளரும் பண்புடையது. இவ்வளவு பலன்களை தரக்கூடிய இம்மரத்தை சற்று யோசிக்காமல்நேற்று வெட்டி எறிந்து விட்டனர்.போலீசில் 'பெயரளவுக்கு' புகார் கொடுத்தால் போதாது. நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.

மூலக்கதை