அம்மா விளையாட்டு மைதானம் பணி... ஜரூர்! கிராமப்புற இளைஞர்கள் சாதிக்க ஏற்பாடு

தினமலர்  தினமலர்
அம்மா விளையாட்டு மைதானம் பணி... ஜரூர்! கிராமப்புற இளைஞர்கள் சாதிக்க ஏற்பாடு

கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், கிராம இளைஞர்களின் நலன் கருதி, அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 56 லட்சத்து, 55 ஆயிரத்து, 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், விளையாட்டுத் துறையில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமை இருந்தும் முன்னேற முடியாமல்தடை ஏற்படுகிறது.

இதேபோல், கிராமப்புற இளைஞர்களும் விளையாட்டுப் பயிற்சி பெறுவதற்கு பெரும்பாலான ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் போதுமானதாக இல்லை.இதை போக்குவதற்காககிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டுத் துறைகளில் சாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், 110 விதியின் கீழ், ரூ.65.35 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சிகளில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார்.அதில், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கபடி, கைப்பந்து, கிரிக்கெட், பால் பேட்மிண்டன் மைதானங்கள் தலா ரூ.87 ஆயிரம் மதிப்பில் ஏற்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிந்து, ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தந்த ஊராட்சிகளிலும் உள்ள உபயோகமற்ற காலி இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான ஊராட்சிகள் விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்துள்ளன. ஒரு சில கிராமங்களில் தான் காலி இடம் இல்லாததால் சிக்கலில் உள்ளன. மற்ற கிராமங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள மைதானத்தில் நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களைக்கொண்டு மைதானமாக புல்தரைகளை செதுக்கி, மேடு பள்ளங்கள் இல்லாமல் சம தரையாக வடிவமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்ட பின், விளையாட்டு தலைமை அலுவலகம் மூலம் இளைஞர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், பந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதனை பயன்படுத்தி கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அனைவரது ஆசை.

-நமது நிருபர்-

மூலக்கதை