ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி

அடிலெய்டு: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 41 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.கேரன் ரால்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் குவித்தது. மரிஸன்னே காப் 44, டு பிரீஸ் 28, வுல்வார்ட் 38*, டிரையன் 23* ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து தோற்றது. காஞ்சனா 24, ஹாசினி 22 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் சுனே லுவஸ் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இங்கிலாந்து அசத்தல்: நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் (கேத்தி மார்டின் 57, சூஸி பேட்ஸ் 33, செக் காஸ்பரெக் 15); இங்கிலாந்து 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன் (ஏமி ஜோன்ஸ் 21, டேனியல் வியாட் 42, கேப்டன் ஹீதர் நைட் 45*). பிரிஸ்பேனில் இந்தியா - பாகிஸ்தான், வங்கதேசம் - தாய்லாந்து, ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நடக்க இருந்த பயிற்சி ஆட்டங்கள் கனமழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. வரும் 21ம் தேதி தொடங்கும் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை