தினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தினமும் நூற்றுக்கணக்கானோர் சாவு: சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,665 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 142 பேர் இறந்ததால், பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கடந்தாண்டு இறுதி முதல் பரவி வருகிறது. முதலில் இதை மறைத்து வந்த சீனா, நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டவுடன் உண்மையை ஒப்புக் கொண்டது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர்  பலியானதால் நேற்று முன்தினம் பலி எணணிக்கை 1500 தாண்டியது.  இந்நிலையில் சீன அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 142 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1665 ஆக உயர்ந்துள்ளதாக அறிவித்தது. புதிதாக 2009 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த வைரஸ் தொற்றுவால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் இருந்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,419 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையளித்த மருத்துவ பணியாளர்கள் 1,700 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் பலியாயினர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் சீன சுகாதாரத் துறையினருடன் இணைந்து உலக சுகாதார நிறுவனத்தினத்தின் நிபுணர்கள் குழுவும் நேற்று முதல் ஈடுபட்டுள்ளது. இவர்கள் கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள  உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலை குணமாக்க நிலையான மருந்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்த குழுவின் இலக்கு. பரிசோதனையில் பல தடுப்பு மருந்துகள் உள்ளன.  தற்போது சில குறிப்பிட்ட மருந்துகளை மட்டுமே தேர்வு செய்து அதன் மூலம் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கப்பலில் பாதிப்பு 355 ஆக அதிகரிப்புஜப்பான் கடற்கரையில் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள டையமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது. இதில் உள்ள அமெரிக்க பயணிகளை மீட்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது.  ஹாங்காங்கும் தனி விமானம் மூலம் தங்கள் மக்கள் 330 பேரை மீட்க முடிவு செய்துள்ளது. இதே முடிவை கனடாவும் எடுத்துள்ளது. கப்பலில் உள்ள 50 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 3,700 பேரில், 1219 பேருக்கு இதுவரை பரிசோதனை  செய்யப்பட்டதில், 355 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் ஜப்பான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் கப்பலுக்குள்ளே 14 நாட்கள் தங்கியிருக்கும்படி  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மருந்து அனுப்புகிறது இந்தியாகொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு, நல்லெண்ண அடிப்படையில் இந்தியா மருந்துப் பொருட்களை அனுப்ப உள்ளது. இதுகுறித்து சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘‘இந்த சோதனையான காலக்கட்டத்தில் சீன மக்களுக்கு இந்தியா, துணை நிற்கும். கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள சீனாவின் கோரிக்கைப்படி, அந்நாட்டுக்கு  ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த கையுறைகள், முகமூடிகள், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் உடைகள் போன்றவற்றுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், என்னென்ன மருந்து வகைகள் தேவை என்பது குறித்து சீனாவிடம்  கேட்கப்பட்டுள்ளது. அது முடிவான உடன், உடனடியாக இந்தியா மருந்துப் பொருட்களை சீனாவுக்கு அனுப்பி வைக்கும்’’ என்றார்.

மூலக்கதை