ஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி

தினகரன்  தினகரன்
ஏமன் நாட்டில் சவுதி நடத்திய கூட்டுப்படை தாக்குதலில் 31 அப்பாவி மக்கள் பலி: விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடி

துபாய்: ஏமன்  நாட்டில் அரசுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சியாளர்கள்  கடந்த 2015ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகின்றனர். ஏமன் அரசு படைக்கு  சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. ஏமன்-சவுதி கூட்டுப்படைகள் ஹுதி  கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு, சவுதி அரேபியாவின் அல் ஜாவ்ப் மாகாணத்தில்  அல்-அய்ஜா பகுதியில் ஏமன்-சவுதி கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்  நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஏமனுக்கான ஐநா மனித  உரிமை ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிராண்டே கூறியதாவது: கடந்த 15ம் தேதி இரவு  ஏமன் - சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 31 பேர்  உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.  சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் சென்ற இரண்டு  அதிகாரிகள், ஊழியர்களின் நிலை என்னவாயிற்று எனத் தெரியவில்லை. இவ்வாறு லிஸ் கிராண்டே கூறினார்.இதற்கிடையே, விமானம் நொறுங்கி விழும் முன், அதில் இருந்த  ஊழியர்கள் வெளியேறி தப்பியதாகவும், ஆனால் அவர்கள் சர்வதேச மனித உரிமைகளை  மீறி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சவுதி ஊடகம் செய்தி   வெளியிட்டுள்ளது. அதே நேரம், ஹுதி படையினரின் அல் மசிரா  தொலைக்காட்சியில், ஏமன்-சவுதி கூட்டுப்படையின் விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் இறந்துள்ளனர்  மற்றும் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில்  வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில், சவுதி கூட்டுப்படையின் விமானத்தை  கிளர்ச்சியாளர்கள் தாக்கியதும், அது வானில் சுக்கு நூறாக உடைந்து,  தீப்பிழம்புகளாக பூமியை நோக்கி கீழே வருவதும் காட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை