சொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு

தினகரன்  தினகரன்
சொன்னா நம்புங்க ஜீ... மசூத் அசார காணோம்: குடும்பத்துடன் தலைமறைவு என சொல்கிறது பாக். அரசு

இஸ்லமாபாத்: தீவிரவாதி மசூத் அசார் குடும்பத்துடன் காணவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன், பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசார். இவன்தான், மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகியவற்றையும் தன் ஆட்களை கொண்டு நடத்தினான்.  ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் தலைவனான இவனை, சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்காவும் அறிவித்துள்ளது.ஆனால், அவன் தன் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வந்தாலும், அங்கு பல நிகழ்ச்சியில் மசூத் அசார் தலைகாட்டுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே 1ம் தேதி, ஐநா பாதுகாப்பு கவுன்சில், மசூத் அசாரை  சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது.இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்கும் சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப். பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியது. மேலும், அந்நாட்டை  சாம்பல் பட்டியலில் சேர்த்தது. இந்த பட்டியலில் இருந்து விரைவில் அதனை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தது. ஆனால், வீடோ அதிகாரம் கொண்ட சீனாவினால், பாகிஸ்தான் தப்பி வருகிறது. எனினும், தற்போது பல்வேறு  நாடுகள் பாகிஸ்தானை நிர்ப்பந்திக்க ஆரம்பித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது.இந்நிலையில், சர்வதேச தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், ‘‘தீவிரவாதி மசூத் அசாரையும் அவனது குடும்பத்தினரையும் காணவில்லை’’ என பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. அந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் 16 சர்வதேச தீவிரவாதிகள் இருந்தனர் என்றும் அவர்களில் 7 பேர் இறந்துவிட்டனர் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நெருக்குதல் எழும்போது, பாகிஸ்தான் இதுபோன்று ஏதாவது ஒன்றை சொல்லி சமாளிக்க முயற்சிக்கும். இப்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோன்று, ஒரு குடும்பமே காணவில்லை என்று பாகிஸ்தான் அரசு  கூறியிருப்பதை உலக நாடுகள் சந்தேகக் கண்ணுடன் பார்க்க ஆரம்பித்துள்ளன.

மூலக்கதை