காதல் கடிதம் கொடுத்து அடி வாங்கிய கே.பாக்யராஜ்

தினமலர்  தினமலர்
காதல் கடிதம் கொடுத்து அடி வாங்கிய கே.பாக்யராஜ்

எந்த சினிமா மேடையில் ஏறினாலும் தனது கடந்த கால சினிமா அல்லது சொந்த வாழ்க்கையில் நடந்த ஏதேனும் சுவராஸ்யமான விசயங்களை ஒரு குட்டிக்கதையாக பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் டைரக்டர் கே.பாக்யராஜ். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய அவர் தனது இளமை காலத்தில் ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்ததைப்பற்றி சொன்னார்.

அதாவது, நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு பெண்ணுக்கு ஒருநாள் காதல் கடிதம் கொடுத்தேன். அப்போது அந்த பெண்ணின் அண்ணனும் அங்கு வந்து விட்டார். இதனால் கடிதத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து நான் ஓட்டம் பிடித்து விட்டேன். அப்படி நான் வந்த சில நாட்களில் அந்த பெண்ணின் அண்ணன் எனது அண்ணனைப்பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்தார்.

அவரது தங்கைக்கு காதல் கடிதம் கொடுத்த விசயத்தை சொல்லத்தான் வந்திருக்கிறார் என்று பயந்து போய் இருந்தேன். ஆனால் அவரோ அன்று நடந்த எந்த விசயத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். அதனால் அவர் நாம் கடிதம் கொடுத்ததை கவனிக்கவில்லை போலும் என்று தைரியமாகி விட்டேன்.

அதையடுத்து என் அண்ணன் கடையில் வாங்கி வரச்சொன்ன பொருளை வாங்கி விட்டு நான் வீட்டிற்கு சென்றபோது அந்த பெண்ணின் அண்ணன் இல்லை. ஆனால் என் அண்ணன் கோபத்துடன் எனது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். அந்த நபர் விசயத்தை சொல்லிவிட்டார் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் என் அண்ணனோ, நீ விலைமாது இருக்கும் தெருவிற்கு அடிக்கடி செல்வதாக சொல்கிறாரே. உனக்கு அங்கு என்ன வேலை. இனிமேல் அந்த பக்கமே போகக்கூடாது என்று என் அண்ணன் என்னை எச்சரித்தார். அப்போதுதான் அந்த நபர் தன் தங்கையை பார்க்க தனது தெருப்பக்கமே இவன் வந்து விடக்கூடாது என்று இப்படி வேறு மாதிரி போட்டுக்கொடுத்துள்ளார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்று சொன்னார் கே.பாக்யராஜ்.

மூலக்கதை