ஓராண்டு இழுபறிக்கு பிறகு காவிரி ஆணையம் 25ம் தேதி கூடுகிறது: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு

தினகரன்  தினகரன்
ஓராண்டு இழுபறிக்கு பிறகு காவிரி ஆணையம் 25ம் தேதி கூடுகிறது: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: கடந்த ஓர் ஆண்டு இழுபறிக்கு பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் நேற்று நடந்த ஒழுங்காற்று குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக அதன் ஒழுங்காற்று குழுவின் 25வது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் உள்ள சேனா பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சார்பில் தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது மாநிலத்தின் தரப்பு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தனர். கூட்டத்தின் முடிவில் காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் கூறும்போது,”இன்று (நேற்று) நடந்த ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் நடப்பாண்டு முழுவதும் நீர் பங்கீடு எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களின் நீர் இருப்பு, மற்றும் வரத்து ஆகியவை குறித்த புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது ஒழுங்காற்று குழு தலைமையால் பரீசீலனை செய்யப்படும். மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் பிப்ரவரி அதாவது இந்த மாதம் 25ம் தேதி நடைபெறும். இதற்கு தற்போதைய மத்திய நீர்வளத்துறை தலைவராக இருக்கும் அருண் குமார் சின்கா தலைமை ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார்.‘தலைவர் இல்லாத ஆணையம்’: கடந்த ஓராண்டாக நடக்காமல் இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது நடைபெற உள்ளது இதில் இன்னமும் தற்போது வரை காவிரி ஆணையத்திற்கு என புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை