அகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு

தினகரன்  தினகரன்
அகில இந்திய ஆர்பிஎப் தடகளம் தெற்கு ரயில்வே வீரர்களுக்கு பாராட்டு

சென்னை: அகில இந்திய அளவில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு ரயில்வே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை, பொது மேலாளர் ஜான் தாமஸ் பாராட்டினார்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்பிஎப்) வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற அகில இந்திய தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தெற்கு ரயில்வே அதிக போட்டிகளை வென்று முதலிடம் பிடித்ததுடன், சாம்பியன் பட்டமும் வென்றது. போட்டியில் 2வது இடத்தை மத்திய ரயில்வே பாதுகாப்பு  படையும், மூன்றாவது இடத்தை சிறப்பு ரயில்வே பாதுகாப்பு படையும் வென்றன.அதுபோல், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை காவலர் வினோத் கண்ணன், வட்டு எறிதல் போட்டியில் 44.10 மீட்டர் தொலைவுக்கு எறிந்து புது சாதனை படைத்தார். போட்டியின் சிறந்த தடகள வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அதுபோல் பெண் காவலர் திவ்யா, போட்டியின் அதிவேக வீராங்கனையாக தேர்வானார். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று  சென்னை திரும்பிய  ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், வீராங்கனைகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் அருண்குமார், மண்டல தலைமை பாதுகாப்பு ஆணையர் பிரேந்திரகுமார் ஆகியோர் பாராட்டினர்.

மூலக்கதை