முறைப்படி அறிவித்தார் ஜனாதிபதி: டெல்லி முதல்வராக இன்று கெஜ்ரிவால் பதவியேற்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

தினகரன்  தினகரன்
முறைப்படி அறிவித்தார் ஜனாதிபதி: டெல்லி முதல்வராக இன்று கெஜ்ரிவால் பதவியேற்பு: விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

புதுடெல்லி: டெல்லியில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இன்று பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த நிலையில், அவர் வாரணாசி நிகழ்ச்சியில் பங்கேற்பதால், இதில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த 11ம் தேதி வெளியானது. இதில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜ 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை பலத்துக்கு 36 இடங்கள் இருந்தால் என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டெல்லியை ஆட்சி செய்யப்போகிறது. கெஜ்ரிவால் இன்று காலை 10  மணிக்கு ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றுக் கொள்கிறார். கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் மற்ற மாநில முதல்வர்களுக்கோ அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.தன் மாநில மக்கள் முன் கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு, ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. மேலும், டெல்லியில் இருந்து தேர்வான 7 பாஜ எம்பிக்களுக்கும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 8 பாஜ எம்எல்ஏக்களுக்கும் விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி இன்று தனது தொகுதியான வாரணாசியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதனால் பிரதமர் மோடி, கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள மாட்டார் என்று தெரியவந்துள்ளது.இதற்கிடையே, முதல்வர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில கல்வி இயக்குநரகம் (டிஓஇ) டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பு நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மகிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 20 ஆசிரியர்களுடன் கலந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகை நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘‘டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல்வராக நியமித்துள்ளார். அவரது ஆலோசனையின்பேரில் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசேன் மற்றும் ராஜேந்திர கவுதம் ஆகிய 6 எம்எல்ஏ.க்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை