மகாராஷ்டிராவில் தேசிய மக்கள் பதிவேடுக்காக மே 1 முதல் தகவல்கள் சேகரிப்பு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் தேசிய மக்கள் பதிவேடுக்காக மே 1 முதல் தகவல்கள் சேகரிப்பு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

மும்பை: குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா அரசு வரும் மே 1ம் தேதியில் இருந்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான தகவல்களை சேகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இவ்விரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனாவோ சிஏஏ சட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று சிவசேனா தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறி வருகிறார். இதனால், இந்த பிரச்னைகளில் சிவசேனாவின் நிலைப்பாட்டில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.இந்த நிலையில்தான், தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. மே 1ம் தேதி முதல் இதற்காக மக்களிடம் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் இது தொடர்பாக விரைவில் மகாராஷ்டிரா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் மே 1ம் தேதியில் இருந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவதில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆர்வத்துடன் இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை