மாநிலங்களவையில் மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் 51 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரலில் காலி: தேர்தல் அறிவிக்கவுள்ளதால் வேட்பாளர் தேர்வு தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநிலங்களவையில் மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் 51 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரலில் காலி: தேர்தல் அறிவிக்கவுள்ளதால் வேட்பாளர் தேர்வு தீவிரம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் 51 எம்பிக்களின் பதவிகாலம் ஏப்ரலில் காலியாகிறது. பல மாநிலங்களில் பாஜக தோற்றதால் அக்கட்சியின் எம்பிக்களின் பலம் சரிகிறது.

விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கவுள்ளதால் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம்காட்டி வருகின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் (எம்பி) மொத்த எண்ணிக்கையான 250ல், 238 பேர் தேர்தல் மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   ஆனால், நடைமுறையில் தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களில் 233 பேர் தேர்தல் (அந்தந்த மாநில எம்எல்ஏக்கள்) மூலமும், மீதியுள்ள 12 பேர் நியமன உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நியமன உறுப்பினர்களை குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பார்.

மீதமுள்ள 233 எம்பிக்களில் தமிழகத்தின் சார்பாக 18 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவிலிருந்து ஏழு, தமிழகத்திலிருந்து ஆறு, பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து தலா ஐந்து, ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து தலா நான்கு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா மூன்று, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு, அசாம், மணிப்பூர், அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு எம்பிக்கள் என, 51 பேரின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது.

இம்மாத இறுதி அல்லது மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் நடக்கவுள்ள 51 எம்பிக்களின் இடங்களுக்கு வேட்பாளர்களை ேதர்வு செய்ய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரஸ் வலிமை ஓரளவு குறைகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை மாநிலங்களவையில் குறிப்பிடத்தக்க பலத்தை பெறவாய்ப்புள்ளது. ஆளும் பாஜகவை பொறுத்தவரை மாநிலங்களவையில் இன்னும் பெரும்பான்மை பலத்தை பெற முடியாத நிலையில் இருந்தும், அக்கட்சிக்கு (அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றன.

தற்போது 82 எம்பிக்களை பாஜக மக்களவையில் கொண்டிருந்தாலும், வரும் தேர்தலில் 13 உறுப்பினர்களைச் புதியதாக சேர்க்கும்.

அதாவது பதவிகாலம் முடியும் மொத்தமுள்ள 51 பேரில் 18 ேபர் பாஜகவை சேர்ந்தவர்கள். இவர்களில் நான்கு பேர் எண்ணிக்கை குறைந்து, 13 பேரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

ஒடிசாவில் மூன்று காலியிடங்களில் 2 இடங்களை பிஜூ ஜனதா தளம் வெல்ல வாய்ப்புள்ளது. பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கும்.

ஆந்திராவில் நான்கு இடங்களையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றும். இமாச்சல பிரதேசம் மற்றும் அரியானாவில் தலா ஒரு இடத்தை பாஜக அதன் எண்ணிக்கையில் சேர்க்கும்.

46 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக்கு எதிர்வரும் தேர்தலில் 10 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த கட்சியின் 11 உறுப்பினர்களில் பதவிகாலம் முடியும் நிலையில், பெரிய இழப்பின்றி 10 எம்பிக்கள் கிடைப்பர்.

இதற்கு காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸ் ஓரளவு பல மாநிலங்களில் பலம் பெற்றதுதான். அதாவது, மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடந்த ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச பேரவை தேர்தல், தொடர்ந்து நடந்த மகாராஷ்டிரா தேர்தல்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் அதிகரித்ததால், அக்கட்சியின் மக்களவை பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஆனால், பாஜக-வின் எண்ணிக்கையில் சரிவை சந்திக்கிறது.

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு இரண்டு எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய கூட்டாளியான சிவசேனா உறவு முறிந்ததால், குறைவான இடங்களையே கைப்பற்றும்.

அதேநேரம், சிவசேனா ஒரு இடத்தையும், கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என். சி. பி) இரண்டு இடத்தையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெறும். பாஜக கூட்டணி கட்சியான இந்திய குடியரசுக் கட்சிக்கு (மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே) ஒரு இடமும் கிடைக்கும்.


மேற்கு வங்கத்தில் காலியாகும் ஐந்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் நான்கு இடங்களில் வெல்லும். மா. கம்யூ கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும்.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேட்புமனு தாக்கல் செய்தால், காங்கிரஸ் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கு மூன்று, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) இரண்டு இடங்கள் கிடைக்கும்.

முன்னாள் முதலமைச்சரான ரப்ரி தேவி, மாநிலங்களவைக்கு அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாஜகவின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஒன்றாக குறையும்.

ஐக்கிய ஜனதா தளம் இரண்டு இடங்களை பெறும். தமிழகத்தில் ஆறு பதவிகளில் திமுக, அதிமுக தலா மூன்று இடங்களை கைப்பற்றும்.

அவற்றில், இந்த இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒருசில இடங்களை வழங்க முடிவு செய்துள்ளன.

ஏப்ரலில் விடைபெறும் எம்பிக்கள் பட்டியலில், மாநிலங்களவைதுணை தலைவர் ஹரிவன்ஷ், என்சிபி தலைவர் சரத் பவார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் கட்சியின் மோதிலால் வோரா, திக்விஜய் சிங், மதுசூதன் மிஸ்திரி, பாஜகவின் விஜய் கோயல், சத்யநாராயண் ஜாதியா உள்ளிட்ட முக்கிய பிரமுகங்கள் அடங்கும்.
காங்கிரஸ் தரப்பில், ஜோதிராதித்யா சிந்தியா, ரன்தீப் சுர்ஜேவாலா, மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாத், ஆர். பி. என். சிங் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருப்பதால், அவர்களுக்கு எம்பி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



'தமிழகத்தில் 6 பேர் யார்?'
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில், திருச்சி சிவா (திமுக), டி. கே. ரங்கராஜன் (மா. கம்யூ. ), சசிகலா புஷ்பா (அதிமுக - தற்போது பாஜக-வில் இணைவு), விஜிலா சத்யானந்த் (அதிமுக), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அதிமுக), முத்துகருப்பன் (அதிமுக) ஆகியோர் அடங்குவர்.

இந்த 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. இதனால் 6 புதிய எம்பிக்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதில், திமுக. வில் 3 எம்பிக்களும், அதிமுக. வில் 3 எம்பிக்களும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.


.

மூலக்கதை