தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி: 9வது முறையாக ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடி: 9வது முறையாக ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

வழக்கமான நிதி நிலை அறிக்கையாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் துவங்கியது. தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9ம் தேதி வரை நடந்து முடிந்தது.

இந்நிலையில், 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் 14ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமானது. அப்போது, 2020-21ம் ஆண்டுக்கான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2018-19ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 8. 17 சதவீதம் அடைவதை உறுதி செய்யப்பட்டது. 2019-20ம் ஆண்டில் 7,27 சதவீதம் என்ற மதிப்பிலேயே வளர்ச்சி விகிதம் இருந்தது.

2020-21ம் ஆண்டு மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.

மாநிலங்களுக்கிடையேயான நிதி பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4. 023 சதவீதத்தில் இருந்து 4. 189 சதவீதமாக சிறிதளவே உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ. 4. 025 கோடி வழங்க 15வது நிதிக்குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக ரூ. 74 ஆயிரத்து 340 கோடி நிதிக்குழு பரிந்துறைத்த நிலையில், மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் மானியத்திற்காக ரூ. 30 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தும்.

2019-20ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் வருவாய் கணக்கு குறித்த மொத்த செலவீனம் ரூ. 2,12,035. 93 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

வருவாய் கணக்கில் கூடுதல் செலவினத்திற்காக ரூ. 2,282. 43 கோடி மற்றும் ரூ. 3,952. 48 கோடி மதிப்பீட்டில் இரண்டு தணை மதிப்பீடுகள் இந்த அவையின் முன் வைக்கப்பட்டன. 2019-20ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் வருவாய் செலவினத்தின் ஒட்டுமொத்த அளவு ரூ. 2,16,932. 51 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வருவாய் வரவினங்களில் பொருளாதார வளர்ச்சியின் காரணிகளான ஒரு சில துறைகளில் காணப்படும் மந்தநிலை காரணமாக மாநில அரசின் வரி வரவினங்கள், குறிப்பாக பொருட்கள் மற்றும் சேவைகள் வரி, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கு உட்படாத பொருட்களின் மீதான மதிப்புக் கூட்டு வரி மற்றும் மோட்டார் வாகன வரிகள் ஆகியன வரவு செலவுத் திட்ட இலக்குகளைக் காட்டிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயத்தீர்வை, முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் ஆகியவை வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால், பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-20ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கில் மொத்தத்தில் ரூ. 7,586. 07 கோடி குறைவு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மாநில அரசு தனது அத்தியாவசிய செலவினங்களை எதிர்கொள்ள மத்திய வரி நிதிப் பகிர்வு அல்லாத பிற நிதி ஆதாரங்களை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

2020-2021ம் வரவு செலவு திட்டத்தில் ஆயத்தீர்வை மூலம் ரூ. 8,133. 81 கோடியாகவும், மோட்டார் வாகன வரி ரூ. 6,897. 73 கோடியும் கிடைக்கும். ஐந்தாண்டிற்குட்பட்ட குடியிருப்புக்கான வாடகை ஒப்பந்தங்களில் தற்போது நடைமுறையில் உள்ள முத்திரைத்தாள் வரியினை 1 சதவீதத்தில் இருந்து ரூ. 0. 25 சதவீதமாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் ரூ. 5 ஆயிரத்துக்கு மிகாமல் வசூலிக்கப்படும். 2020-2021ம் நிதி ஆண்டின் மாநில அரசின் கடன் திட்டமிடல் ரூ. 62,757 கோடியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில், ரூ. 59,209 கோடியை மட்டும் கடனாக பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 2020-21 நிதி ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

கடந்த 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கடன் 3. 97 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கடன் 3. 55 லட்சம் கோடியாகவும் 2017-18ல் 3. 14 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும்.

இந்த பட்ஜெட்டில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இதனால் அரசு ஊழியர்கள், போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 63 ஆயிரம் கடன்

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7 கோடியே 21 லட்சத்து 4739 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் என்பது ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் வைக்கப்படும் சுமையாகும்.

மக்களின் நலன் என்ற ஒன்றை முன்னிறுத்தி ஒவ்வொரு ஆண்டும் கடன்சுமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு ஒவ்வொரு ஆண்டும் அடுக்கடுக்காக கடன்களை வாங்கி வருகிறது.

அதன்படி, 2020-2021 நிதி ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2017-18ல் 3. 14 லட்சம் கோடியாகவும், 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கடன் 3. 55 லட்சம் கோடியாகவும், 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கடன் 3. 97 லட்சம் கோடி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 2020-2021ம் ஆண்டில் அதாவது ஒரே ஆண்டில் 60 ஆயிரம் கோடியாக கடன் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் ரூ. 63 ஆயிரத்து 295 கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தை தலையிலும் இந்த கடன் சுமையை அரசு ஏறியுள்ளது.

.

மூலக்கதை