கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் மருந்து, மாத்திரை பற்றாக்குறை அபாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் மருந்து, மாத்திரை பற்றாக்குறை அபாயம்

புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் அந்நாட்டின் சர்வதேச வர்த்தகம்  முற்றிலும் முடங்கிய நிலையில், சீனாவை சார்ந்துள்ள நாடுகள் கடுமையான  மற்றும் பொருளாதார ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு  ஆளாகி உள்ளன.

சீனாவில் இருந்து  இந்தியா 57 வகையான மூலக்கூறுகளை கொண்ட மருந்துகளை இறக்குமதி  செய்கிறது. அதில், 19 வகையான மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே  இந்தியா சார்ந்துள்ளது.

​இந்த ஆண்டு ஏப்ரல் வரை தாக்குபிடிக்கும் வகையில்  மருந்து மூலப் பொருட்களை சீனா சப்ளை செய்திருக்கிறது. ஆனால், கடந்த ஒரு  மாதத்திற்கும் மேலாக சீனாவிலிருந்து மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி  எதுவும் நடக்கவில்லை.

இதுதொடர்பாக, எட்டு தொழில்நுட்பத் துறைகளின் நிபுணர்  குழு, மத்திய அரசிடம் முதன்மை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில்,  ‘ஒரு மாதத்திற்குள் சீனாவிலிருந்து மருந்து பொருட்கள் மீண்டும்  இறக்குமதியை தொடங்கவில்லை என்றால், இந்தியா விரைவில் கடுமையான நெருக்கடியை  எதிர்கொள்ளக்கூடும். ஜனவரி மாதத்தில் சீனாவுக்கு விடுமுறை இருந்ததால்  மூலப்பொருட்கள் மிகக் குறைவாகவே கிடைத்தன.

அதன்பிறகு கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலால், அந்நாட்டில் மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தி  நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலவச மருந்துகள் வழங்கல் கடந்த  மாதத்தில் இருந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்படியே சீனா மீண்டும்  உற்பத்தியை தொடங்கினால்கூட, கடல் வழியே இந்தியாவுக்கு பொருட்களை  பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடியால் ராஜஸ்தான் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இலவச மருத்துவ திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மருத்துவ சேவைகள் கழகத்திற்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் பத்து பெரிய நிறுவனங்கள் கூட்டுக் கடிதம் எழுதியுள்ளன.

அதில், ‘மருந்துகளுக்கான பெரும்பான்மையான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. நிறுவனங்கள் இப்போது வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே இருப்புகளை வைத்திருப்பதால், அவற்றின் விநியோகத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு தாமதம் ஏற்பட்டால், எங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச மருந்து தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 80 சதவீத ஏபிஐ (மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இறக்குமதிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மருத்து தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் (கொள்முதல்) கைலாஷ் நாராயண் மீனா குறிப்பிடுகையில், “ராஜஸ்தானில் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் வழங்கப்படுவது பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்.

அவர்களுக்குத் தேவையான மருந்துகள் கிடைக்கின்றன. அதற்காக சப்ளையர்களுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

அவர்கள் மூலப்பொருட்களை வாங்க முடியாவிட்டால் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச மருந்து, மாத்திரை வினியோக நெருக்கடி ராஜஸ்தானில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மருந்து மற்றும் மருந்து சப்ளையர்களையும் அச்சுறுத்துகிறது என்று மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருந்து, மாத்திரை பற்றாக்குறை நிலைமை விரைவாக மேம்படவில்லை என்றால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஹார்மோன்கள் முதல் வைட்டமின்கள் வரை பல வகையான மருந்துகள் கிடைப்பது நாட்டில் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து மருந்துகள் ஏற்றுமதியை நிறுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 1. 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மருந்து பொருட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை