‛நெற்றிக்கண்' ரீமேக் - என் அனுமதி பெற வேண்டும்: விசு

தினமலர்  தினமலர்
‛நெற்றிக்கண் ரீமேக்  என் அனுமதி பெற வேண்டும்: விசு

அப்பா - மகன் என ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்த படம் ‛நெற்றிக்கண்'. கவிதாலயா தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ரஜினியுடன் லட்சுமி, மேனகா, சரிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். அப்பா ரஜினி பெண் பித்தராக நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், ரஜினி நடித்த கேரக்டரில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், மேனகா நடித்த கேரக்டரில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நெற்றிக்கண் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியது விசு. ரீமேக் குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய பல படங்களை நான் மதிக்கும் கே.பாலச்சந்திரின் மகள் புஷ்பா கந்தசாமி, என் அனுமதி இன்றி பலருக்கு விற்றுள்ளார். நெகட்டிவ் உரிமம் அவர்களிடம் இருந்தாலும் படங்களின் கதை என்னுடையது. எனவே அதை விற்கும்போது எனக்கு பணம் தராவிட்டாலும் குறைந்தபட்சம் அனுமதியாவது பெற்று இருக்கிறேன். தில்லுமுல்லு படத்தின் கதையை விற்றதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்திருக்கிறேன்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தின் உரிமத்தை ஏவிஎம் சரவணன் பல மொழிக்கு விற்றபோது எனக்கும் பணம் கொடுத்தார். வீடு மனைவி மக்கள் படத்தில் நான் நடிக்க மட்டுமே செய்தேன். அந்த படத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனாலும் தயாரிப்பாளர் ராம நாராயணன் எனக்கு பணம் கொடுத்தார். ஆனால் அந்த நாகரீகம் புஷ்பா கந்தசாமிக்கு தெரியவில்லை.

தற்போது நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாக அறிகிறேன். அந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவன் என்ற முறையில் என்னிடம் அனுமதி பெறாமல் தனுஷ் ரீமேக் செய்யக்கூடாது. அந்தப் படத்திற்கு நானும், எஸ்.பி.முத்துராமனும் எவ்வளவு உழைத்தோம் என்பதை தனுஷ் அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு விசு கூறியிருக்கிறார்.

மூலக்கதை