தென் ஆப்ரிக்கா ‘திரில்’ வெற்றி | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்கா ‘திரில்’ வெற்றி | பெப்ரவரி 13, 2020

ஈஸ்ட் லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணிக்கு பாவுமா (43), கேப்டன் குயின்டன் டி காக் (31), வான் டெர் துசென் (31) நம்பிக்கை அளித்தனர். டேவிட் மில்லர் (16), ஸ்முட்ஸ் (20), பெலுக்வாயோ (18) ஓரளவு கைகொடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் (15), ஜானி பேர்ஸ்டோவ் (23) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜேசன் ராய் (70), கேப்டன் இயான் மார்கன் (52) அரைசதம் கடந்தனர். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. லுங்கிடி வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில், 2வது ரன்னுக்கு ஓடிய அடில் ரஷித் (1) ‘ரன்–அவுட்’ ஆனார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் 3 விக்கெட் வீழ்த்திய லுங்கிடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மூலக்கதை