183 ரன்கள் விளாசினார் ஜெகதீசன் * தமிழக அணி ரன் குவிப்பு | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
183 ரன்கள் விளாசினார் ஜெகதீசன் * தமிழக அணி ரன் குவிப்பு | பெப்ரவரி 13, 2020

 ராஜ்கோட்: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் 183 ரன்கள் விளாசினார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. ‘ஏ’, ‘பி’ பிரிவில் இருந்து குஜராத் (29), சவுராஷ்டிரா (28) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. தமிழக அணி (19 புள்ளி) கடைசி லீக் போட்டியில் போனஸ் புள்ளியுடன் வென்றால் மட்டுமே காலிறுதி குறித்து யோசிக்க முடியும் என்ற நிலையில் சவுராஷ்டிராவுடன் மோதுகிறது.

முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் (61), முகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

அசத்தல் சதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முகமது கைகொடுக்க ஜெகதீசன் சதம் எட்டினார். 8வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த போது முகமது (42) அவுட்டானார். சித்தார்த் வந்த வேகத்தில் ‘டக்’ அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஜெகதீசன் 183 ரன்னுக்கு அவுட்டானார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 424 ரன்கள் குவித்தது. விக்னேஷ் (5) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் உனத்கட் 6 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு தேசாய் (12), கிஷன் (24), ஜடேஜா (16) ஏமாற்றம் தந்தனர். இரண்டாவது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து, 317 ரன்கள் பின்தங்கி இருந்தது.

கோவா அபாரம்

மிசோரம் அணிக்கு (109/10, 170/10) எதிரான லீக் போட்டியில் கோவா அணி (490/4) இன்னிங்ஸ், 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பெற்ற கோவா அணி (50 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.

 

இது ‘பெஸ்ட்’

கோயம்புத்துாரை சேர்ந்தவர் நாராயண் ஜெகதீசன் 24. விக்கெட் கீப்பர். டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியில் உள்ளார். நேற்று சதம் விளாசிய இவர் முதல் தர போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்களை (183) பதிவு செய்தார். இதற்கு முன் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் 133 ரன்கள் எடுத்திருந்தார்.

மூலக்கதை