சாதிப்பரா அஷ்வின், ஜடேஜா * பயிற்சி போட்டி துவக்கம் | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
சாதிப்பரா அஷ்வின், ஜடேஜா * பயிற்சி போட்டி துவக்கம் | பெப்ரவரி 13, 2020

 ஹாமில்டன்: இந்தியா, நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் மூன்று நாள் பயிற்சி போட்டி இன்று ஹாமில்டனில் துவங்குகிறது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி ‘டுவென்டி–20’ தொடரை 5–0 என அசத்தலாக கைப்பற்றியது. அடுத்து ஒருநாள் தொடரை 0–3 என மோசமாக இழந்தது. தற்போது இரு அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21ம் தேதி வெலிங்டனில் துவங்குகிறது. அன்னிய மண்ணில் வழக்கமாக இரு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி, இம்முறை மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது.

ஹாமில்டனில் நடக்கும் இப்போட்டி டெஸ்ட் அணிக்கான சரியான வீரர்களை கண்டறிய இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்கத்தில் சுப்மன் கில், பிரித்வி ஷா இருவருக்கும் இடையே கடும் போட்டி காணப்படலாம்.

ஒருநாள் தொடரில் சொதப்பிய மயங்க் அகர்வாலும் அணியில் களமிறங்குகிறார். கடந்த 3 போட்டியில் 75 ரன்கள் மட்டும் எடுத்த கேப்டன் கோஹ்லி, ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, ஹனுமா விஹாரி, ரகானே உள்ளிட்டோர் பேட்டிங் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். விக்கெட் கீப்பராக சகா களமிறங்குவார் என்பதால் ரிஷாப் பன்ட் இடம் பெறுவது சந்தேகமே.

யாருக்கு இடம்

பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா, முகமது ஷமிக்கு சோதனைக் களம் தான். மீண்டும் இவர்கள் ‘பார்முக்கு’ திரும்ப முயற்சிக்கலாம். நவ்தீப் சைனி, உமேஷ் யாதவும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் இந்திய அணியில் ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய பயிற்சியில் அஷ்வின், ஜடேஜா இருவரும் திறமை நிரூபிக்க போராடலாம்.

மிட்சல் கேப்டன்

நியூசிலாந்து லெவன் அணிக்கு டேரில் மிட்சல் கேப்டனாக உள்ளார். இந்திய ‘ஏ’ அணிக்கு எதிராக 196, 53 ரன்கள் விளாசிய கிளவர், குக்கலின், ஜேம்ஸ் நீஷம், செய்பெர்ட், இஷ் சோதி, டிக்னெர் என வலுவான வீரர்களுடன் களமிறங்குகிறது நியூசிலாந்து.

 

மூலக்கதை