புரிந்து கொள்ளுங்கள் பும்ரா * ஜாகிர் கான் அட்வைஸ் | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
புரிந்து கொள்ளுங்கள் பும்ரா * ஜாகிர் கான் அட்வைஸ் | பெப்ரவரி 13, 2020

புதுடில்லி: ‘‘வரும் டெஸ்ட் தொடரில் பும்ரா, ‘ரிஸ்க்’ எடுத்து, கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும்,’’ என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்தார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்கு மாதங்கள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட பின் பங்கேற்ற 7 ‘டுவென்டி–20’ல் 8 விக்., மற்றும் 3 ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட் தான் வீழ்த்தினார்.

இதுகுறித்து இந்தியாவின் ஜாகிர் கான் கூறியது:

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் உங்கள் திறமை மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளீர்கள். அதை தக்கவைக்க தொடர்ந்து போராட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக தனது பவுலிங் குறித்து ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளார் பும்ரா.

இப்போதெல்லாம் அவரது பந்து வீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்கின்றனர். இது நல்ல விஷயம் தான். அவரிடம் விக்கெட்டை இழக்காமல் 35 ரன்கள் எடுத்தால் போதும், மற்ற பவுலர்களிடம் ரன்கள் விளாசலாம் என நினைக்கின்றனர்.

இதை பும்ரா புரிந்து கொள்ள வேண்டும். விக்கெட்டுகள் வீழ்த்த கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும். இதற்காக அதிக ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும். நான் முன்னணி பவுலர், எனது வேலை விக்கெட்டுகள் வீழ்த்துவதே என பும்ரா தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சிறப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை