நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் இன்றைக்குள் பதில் அளிக்க கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் இன்றைக்குள் பதில் அளிக்க கெடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு இன்று பிற்பகலுக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் வழக்கை இன்று விசாரிக்க உள்ளது. மருத்துவ மாணவி நிர்பயா டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள், சட்ட நிவாரணங்கள் மூலம் தண்டனையை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க முடியாது எனக்கூறி அரசுகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், குற்றவாளிகள் நான்கு பேரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியதோடும் வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது.இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக இன்று பிற்பகலுக்குள் குற்றவாளிகள் தங்களது பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, ஜனாதிபதி கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.சட்ட உதவியாளர் நியமனம்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனக்கு சட்ட உதவிகள் செய்ய யாரும் இல்லை என விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், பவனுக்கு மூத்த நீதிபதி அஞ்சனா பிரகாஷை சட்ட உதவியாளராக நியமித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.  இதேபோல் குற்றவாளிகளை தூக்கில் போடும் புதிய தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவை பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அதைத்தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர்  திடீர் போராட்டம் நிர்பயா வழக்கு, பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தபோது நிர்பயாவின் பெற்றோரும், குற்றவாளிகளின் உறவினர்களும் தனித்தனியாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் 4 பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோரும், இந்த விவகாரத்தில் தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது என்றும், அரசியலுக்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதி நேரம் நீதிமன்ற வாயிலில் பரபரப்பான சூழல் நிலவியது.

மூலக்கதை