சொன்னதை செய்ய வேண்டும் எம்பி, எம்எல்ஏ.க்களை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
சொன்னதை செய்ய வேண்டும் எம்பி, எம்எல்ஏ.க்களை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘எம்.பி., எம்.எல்.ஏக்கள் உடனான தகவல் தொடர்பில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அலட்சியப்படுத்தினால் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்,’ என அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்கும் சில விஷயங்கள் கண்டுக் கொள்ளப்படாமல் இருந்தது. இது, மக்களவை உரிமைக் குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது, விதிமுறை மீறல் என்பதால், எம்.பி, எம்.எல்.ஏக்கள் விஷயங்களில் நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு மத்திய பணியாளர்  நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:எம்.பி, எம்.எல்.ஏக்கள் மக்கள் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள். ஜனநாயக அமைப்பில் அவர்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. அவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதற்காக, அரசுத் துறைகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் சில கேள்விகளை கேட்கின்றனர் அல்லது சில பரிந்துரைகள் செய்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் இடையேயான அதிகாரப்பூர்வமான விஷயங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் அவ்வப்போது விதிமுறைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், இது சில நேரங்களில் அலட்சியம் செய்யப்படுகின்றன. அதனால், மாற்றி அமைக்கப்பட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை அனைத்து மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை