புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி

புதுடேல்லி: புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. 2019, பிப்ரவரி 14ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணம் செய்தனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில்- ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்கள் வரிசையாக சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் கிராமப்புறச் சாலையில் இருந்த ஒரு சிறிய கார் வேகமாக வந்து துணை ராணுவப்படையினர் சென்ற ஒரு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மிகப்பெரிய சத்தத்துடன் அந்த கார் வெடிக்கப் பேருந்தில் இருந்த 40 துணை ராணுவப்படையினரும் உடல் சிதறி பலியானார்கள். நாட்டின் எல்லையைக் காக்கச் சென்ற துணை ராணுவப்படையினர், தீவிரவாதிகளின் கோரப் பற்களுக்கு இரையாகினர். தேசத்தையே இந்த தாக்குதல் உலுக்கியது. எந்த குற்றமும் செய்யாத சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது மக்களின் மனதில் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த கோர நிகழ்வு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று புல்வாமா தாக்குதலில் உயர்நீத்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை இன்று நாம் நினைவில் கொள்வதால் சில கேள்விகளை கேட்போம்..1. இந்த தாக்குதல் மூலம் அதிகம் பயனடைந்தவர் யார்?2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன?3. புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு, பாஜக அரசில் இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன்? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மூலக்கதை