முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் - காஜல் அகர்வால்

தினமலர்  தினமலர்
முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்  காஜல் அகர்வால்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை பரபரப்பாக இயங்கி வந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு, சமீபகாலமாக ஒரு தேக்கம் ஏற்பட்டது. தற்போது, இந்தியன் - 2 உட்பட, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளிலும், தலா, ஒரு படங்களை கைவசம் வைத்துள்ள அவர், மீண்டும் முன்வரிசைக்கு வந்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:


இந்தியன் - 2 படத்தில் நடிப்பது பற்றி?
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படப்பிடிப்பை துவங்கும்வரை கூட, என்னால் காத்திருக்க முடியவில்லை. கமல் சார் மற்றும் ஷங்கர் சாருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சமூகத்திற்கு நீங்கள் எந்த மாதிரி பங்களிக்க விரும்புகிறீர்கள்?
பெண்கள் அதிகாரம், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் ஏழைகளின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து விட்டேன். எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில் மற்றும் காபி கோப்பையை எடுத்தே செல்கிறேன். மற்றவர்களும் இதையே செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முடிந்தவரை மற்றவர்களுக்குஉதவுவதன் மூலமும், படங்களில் என் பாத்திரங்கள் மூலமாகவும், நான் செய்யும் வேலைகள் மூலமாகவும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.


மெழுகுச் சிலை வைக்கப்பட்ட உலகளாவிய பட்டியலில் நீங்களும் இணைந்துள்ளீர்கள்; இதைப் பற்றி சொல்லுங்கள்?
சொந்த சிலைக்கு சாட்சியாக இருப்பது மிகப் பெரிய மற்றும் அதிசயமான அனுபவம். இத்தகைய அற்புதமான அங்கீகாரம் கிடைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்; நன்றி கடன் பட்டுள்ளேன். அதே நேரத்தில், என் ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பிற்கும், ஆதரவுக்கும் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.


மெழுகுச் சிலையை பார்த்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
இது ஒரு கனவு போன்ற உணர்வாக இருக்கிறது. சிலையை முதன்முதலில் பார்த்தபோது, என் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒரு அற்புதமான அனுபவம். குழந்தையாக இருக்கும்போது சிங்கப்பூருக்கு சென்றேன். அப்போது, மஹாத்மா காந்தியின் மெழுகுச் சிலை முன் அமர்ந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.இப்போது என் சிலையும் அங்கு இருப்பது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.


உங்களுக்கு எதற்காக மெழுகுச்சிலை வைக்கப்பட்டது எனக் கூற முடியுமா?
இதுவரை, 60 படங்களில் நடித்துள்ளேன். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விஷயத்துக்காக மெழுகுச் சிலை வைக்கப்படுவது இல்லை.ஒருவரது ஒட்டு மொத்த திறமையை கணக்கிட்டு வைக்கின்றனர். தென் மாநில மொழி படங்களில் நடித்தவர்களில், ஸ்ரீதேவி, மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோருக்கு ஏற்கனவே மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மூலக்கதை