இந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்!

தினகரன்  தினகரன்
இந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி: உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம்!

புதுடெல்லி: கடந்த 2019 பிப்ரவரி 14 அன்று, ஒரு புறத்தில் உலகம் காதலர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்தது. மறுபுறத்தில், 78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்து கொண்டிருந்தனர். இந்திய நேரப்படி சுமார் 3:15 மணியளவில் லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே வந்தபோது, எதிர்பாராத வகையில் ஒரு மகேந்திரா ஸ்கார்பியோ வண்டி ஒன்று பாதுகாப்புப் படையினரின் பேருந்து ஒன்றில் மோதி பயங்கரமாக வெடித்தது. இதில் 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தக் காரில் சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாக பிறகு தகவல்கள் வெளியாகின. இதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததும் தொடர் விசாரணையில் தெரியவந்தது. இந்தத் தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இவர் யார்? எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே, பாகிஸ்தான் தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது, அதில் அகமது தாரின் காணொளியும் வெளியிடப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன், என்று தெரிவித்திருந்தார். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக இந்தத் தாக்குதலை முன்னணி ஊடகங்கள் பதிவு செய்தன. தாக்குதல் நடந்த விதம் என்று இணையத்தில் காணொலிக் கசிவுகளும் நடந்தன. தேசிய அளவில் பெருங்கவனத்தை ஈர்த்த, அரசியல் அளவில் பெரும் முக்கியத்துவம் வகித்த, பாதுகாப்பு அளவில் பல கேள்விகளுக்கு வித்திட்ட இந்தியாவை அதிர்ச்சி கடலில் தள்ளிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

மூலக்கதை