ஆஸ்திரேலியாவில் அதீத பருவநிலை ஏற்ற இறக்கம்: பருவநிலை நெருக்கடி குறித்து உலக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் அதீத பருவநிலை ஏற்ற இறக்கம்: பருவநிலை நெருக்கடி குறித்து உலக நாடுகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் அதீத பருவநிலை ஏற்ற இறக்கம் காரணமாக பருவநிலை நெருக்கடி குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீவு கண்டமான ஆஸ்திரேலியாவில் 1910ம் ஆண்டில் இருந்தே படிப்படியாக உயர்ந்து வரும் வெப்பநிலை கடந்தாண்டின் பிற்பகுதியில் உச்சத்தை தொட்டது மட்டுமின்றி வரலாறு காணாத வறட்சிக்கும் பல்வேறு இடங்களில் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்கும் வித்திட்டது. இதன் விளைவால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்கள் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸில் 2017ம் ஆண்டில் இருந்து வெறும் 12 சென்டி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக கிழக்கு கடற்கரையோரம் வெளுத்து வாங்கும் கனமழை, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. வடமேற்கில் அதிகபட்ச குளிர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்கிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும் காற்று மாசு, மக்களை மூச்சு திணற வைத்துள்ளது. மனிதனால் தூண்டப்பட்ட இந்த அதீத பருவநிலை ஏற்ற இறக்கத்தால் முதல் நாள் 40 டிகிரி செல்சியசுக்கு வெயில் கொளுத்து விட்டு, அடுத்த நாளே ஆலங்கட்டி மழை கொட்டி தீர்க்கும் விசித்திரத்தை ஆஸ்திரேலியா கண்டு வருகிறது. இயற்கையின் இந்த விளையாட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி வனங்களும், விலங்குகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அதிக அளவு குறைப்பது மற்றும் புதைபடிவ எரிபொருள் ஆற்றல் மூலங்களில் இருந்து விலகி செல்வதன் மூலமே இயற்கையின் இந்த மோசமான விளைவுகளை தடுக்க முடியும் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நன்மையோ, தீமையோ நாம் என்ன கொடுக்கிறோமோ அதை தான் இயற்கை நமக்கு திருப்பி அளிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மூலக்கதை